Tuesday, September 12, 2017

முதல் நண்பர்கள்

This summer, during my visit to India, I met friends from high school and college, after a very long time. It used to appear that the world revolves around these relationships and we too take them for granted. But reality strikes and we all move on. I recorded my thoughts after meeting these old friends in a Tamil poem here:

இடையில் நடந்தையெல்லாம்
கடைந்து எறிந்து,
பள்ளி பருவமெனும்
புள்ளியை தள்ளிவிட்டு,
கமுக்கமாய் வாக்கியத்தில்
கமாவைப் போட்டு,
பாக்கி வைத்த
வாக்கியம் தொடர
வியாப்பித்தேன்..

விட்டிலாய் உயிர்
விட்ட இடத்திலேயே
மறுபடியும் எழுந்திருக்க
முயற்ச்சித்தேன்..

பிரிந்த தருணத்தில்
பிறந்து மீண்டும்
சிறகை விரித்து 
பறக்காசைப்பட்டேன்..

உதிர்ந்த இலைக்கு
உதிரம் தந்து
பசையிட்டு ஒட்ட
ஆசைப்பட்டேன்..

விரிந்த மலரை
சுருக்கி மொட்டுக்குள்ளே
ஒப்படைக்க வேண்டி
நப்பாசைக்கொண்டேன்..

விழுந்த துளியை
தந்த மேகத்திற்கே
திருப்பி அனுப்ப
விருப்பப்பட்டேன்..

வேண்டிய சிநேகிதர்களை
மீண்டும் சந்திக்கும்
தருணம் இப்பொழுதே
வரணும் என்று
முளைத்த சிறகை 
முடக்க முடியாமல்
தவித்தேன்..ஆனால்,
காத்திருந்த நாட்களின்
மொத்த எண்ணிக்கைக்கு
ஈடான நிமடங்களுக்கு
கூட கூடமுடியாமல்
வாடினேன்.

அன்று போலவே 
இன்றும் இருப்பார்கள்
என்று வந்தயெனக்கு
நன்றாக புரிந்தது,
மாறி மெருகேறிய
தேறிய முதிர்ச்சி
தேக்கத்தில் தேங்கியதே!
சிந்தனையில் வளர்ச்சி 
வந்ததை காட்டும்
அத்தாட்ச்சிகள் ஓங்கியதே!

எதிர்ப்பார்ப்புகளை மட்டுமே
எதிர்கொண்ட நாம்
ஆசையாய் நிகழ்வுகளை 
அசைப் போட்டோமே,
சந்ததிகளுக்கு நம்
சங்கதிகளை எல்லாம்
புரியாத போதும்
பரிவுடன் சுட்டிக்காட்டினோமே!

இருந்ததெல்லாம்
இறந்த காலமென்மதும்
நடந்ததெல்லாம்
கடந்தவையென்பதும்
உணர்ந்த போது
உறைந்தேன், உலர்ந்தேன்

இரயில் சினேகமா
நம் பள்ளிப்பருவம்?
நம்ப முடியவில்லையே!
கணளவே நீடித்து
காணாமலே போகும்
வாணவில்லென்று இது
தோணவில்லையே!
ஆட்டம் முடிந்ததும்
ஓட்டம் எடுக்கும் 
கூட்டமா நாம்?
கட்டாயம் அந்த
கருத்தில் எனக்கு
உடன்பாடில்லை..

இருப்பினும் நாம் 
இறப்பில்லா உண்மையை
ஏற்கத்தான் வேண்டும்..
ஆரம்பக்கால பருவம்
திரும்ப வராது,
தொடக்ககால நகழ்வுகள்
தொடர முடியாது,
பிள்ளையார் சுழிப்போட்ட
பள்ளிப் பருவம்
உற்சவ மூர்த்தியல்ல,
மீண்டும் மீண்டும்
தேரில் ஏறி
நேரில் வந்து
வலமிட

பள்ளிப் பருவ
காலம் மட்டுமே
காலமானது, நட்புகளல்ல;
முடிந்தவரை நாம்
தெரிந்தவரின் நட்பை
புதுப்பித்துக் கொள்ளவும் 
பாதுகாத்துக் கொள்ளவும்
கத்துக்கொள்ள வேண்டும்.

© Ravishankar Palanivelu, Sep. 12, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

அநீதி

அறிவியல் அறிவை
அறவே பெற்ற
அரிய நங்கை
அரியலூர் அனிதாவை
அறியாதார் உண்டா?

ஸ்டெத்தஸ்கோப் போட
வேண்டிய கழுத்தில்
தூக்கு கையிறா?

நீட்டால் வாழ்வும்
நீடிக்கவில்லை, பாய்ந்த
ஈட்டியாய் கொன்று 
வாட்டியதும் நியாயமில்லை

எத்தனையோ உயிர்களை
காப்பாற்றியிருப்பாய், வாதமில்லை
உன் ஓருயிரை
காப்பாற்றதான் நாதியில்லை

வாய் மூடியேன்
குரல் கொடுக்கவேண்டும்?
வாக்கரிசி போட்டா
வாக்குவாதம் பண்ணவேண்டும்?

நியாயம் கேட்க
மறியல் பண்ணலாம்
மன்றாடியும் பார்க்கலாம்
மண்ணுக்குள்ளா போகனும்?

இத்தனை பேரை
தட்டியெழுப்பிய நீ
தூங்கி விட்டதைதான்
தாங்க முடியவில்லை

இயலாமையால் இல்லை
பயிலாதவளும் நீயில்லை
நீதியே இல்லலையென்பதால்
கொள்கையே இன்று
கொல்லவும் துணிந்தது

தேர்வால் இனி 
தீர்வில்லையென்பது தெரிகிறது 
கல்வி நிர்வாகத்தின்
எல்லா பொறுப்பும் 
மாநிலடமே வருவதை
காணிடும் நாள்
இனிதான் வரும்
அனிதாவால் என்று
மனதை திடமாக்குவோம்.

© Ravishankar Palanivelu, Sep 2, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com)