Thursday, January 18, 2018

எதிர்ப்பார்ப்பு

உன்னை
பார்க்கப் போகும்
எதிர்ப்பார்ப்பில் உள்ள 
புதிர் புரியவில்லை;
இரவு முடிந்து 
வரத்தான் போகும்
விடியலுக்கு போய்
அவசரப்பட வேண்டிய 
அவசியமும் அறியவில்லை

உறைக்கும் என
தெரிந்த பின்னும்
மீளாத ஆசை
மிளகாய் மேல்
உள்ளதுப் போல,
வலிக்கும் எனிலும்
வலிய உனக்காக
காத்திருப்பது பிடிக்கும்

உன் வரவிற்காக 
உறைந்து இருந்ததை
'காத்து' இருந்தேன் 
என்று சொன்ன
ஒன்றும் தெரியாதவன் யார்?
மெய் மட்டும் 
ஓய்ந்திருந்த போதும்
நில்லாத உன்
நினைவலைகள் 
பறந்து விரைந்ததாலா?

உன்
முகத்தை பார்க்கும் ஆவலில் 
நகத்தையெல்லாம் இழந்தேன்,
அவதியில் தனியே
அகதியாய் பரிதவித்தேன்,
மரத்தின் கீழே 
மரமாகி 
வேர்வை வார்த்து
வேர் வைத்தேன்

கடல் சென்ற
கணவன் வரவுக்காக
கரையிலேயே 
கரைந்த
கன்னிகைப் போல்,
பள்ளி முடிந்த பின்
பெற்றோர் வரவுக்காக
வீற்றிருக்கும் பிள்ளையைப் போல்,
வந்து விடமாட்டாயோயென
வெந்து கொண்டிருக்கிறேன்

கால் கடுக்க நின்றேன்
கை விட்டு விடாதே,
மலர் விரிந்தாயிற்று
வண்டாய் வர மறந்திடாதே

அருகே வந்த பின்
அழகே உன்னை 
பார்ப்பதை விட
வரும் போதே
தரிசனம் காண 
விழைந்தேன், 
எனவே என்
விழிகளை நீ வரும்
வழியிலேயே 
கழட்டி விட்டு விட்டேன்,
விழிப்பாய் நடந்து வா

உனக்காக காத்த போதோ
பேச வேண்டியதை
யோசித்தேன்,
மௌனமாயிருந்தேன்;
உன்னை பாத்த போதோ
பேச முடியாமல்
ரசித்தேன்,
மௌனமாயிருந்தேன்

உனக்காக காத்த போதோ
கடிகார முட்கள் இரண்டையும்
சுழட்டி விடவே துடித்தேன்
ஆனால்,
உன்னை பாத்த போதோ
கடிகார முட்கள் இரண்டையும்
கழட்டி விடவே துடித்தேன்

மலையில் ஏறி
மலைத்த பின்,
அலுக்காமல் உழைத்து
இலக்கை எட்டியபின், 
வேண்டி விரும்பிய
பண்டிகை வந்த பின்,
இதற்கா ஆசைப்பட்டோமென
குதர்க்கமாய் தோன்றும்,
காத்திருந்து உன்னை
காண்பது மட்டும்
கண்டிப்பாய் விதிவிலக்கு 

© Ravishankar Palanivelu, January 17, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.