விடா முயற்சியில்
கைவிடாத ஊன்றுகோல்,
மீண்டும் முயற்சிக்க
தூண்டும் வேண்டுகோள்
அயரும் வேளையில்
உயரும் நோக்கத்தை
உரக்கச் சொல்லி
விழிக்க வைக்கும்
வழிகாட்டி அலாரம்
ஊக்கம்
அடை மழையில்
குடைப் போல்,
கலங்கிய கடலில்
களங்கரைவிளக்கம் போல்,
நலிந்த வேளையில்
நம்பிக்கை தருவது
ஊக்கம்
கரை
வரை மட்டுமே
வந்து மடிந்த
அலையை
எல்லை மீறி
எகிற வைக்கும்
பின்னணி புயல்
ஊக்கம்
அளவிளா ஆனந்தத்தை
துளி கூட
சொல்ல முடியாமல்
அல்லோலப்பட்டு
வார்த்தைகள்
வற்றிப் போனாலும்,
அவற்றை
அவற்றை
உடலைக் கொண்டு
உரைக்க வைக்கும்
சிலிர்ப்பு போன்றது
ஊக்கம்
அமாவாசை
இருட்டில் நிலவொளி
இருக்காது என்றாலும்
நட்சத்திர சிமிட்டல்களை
நாசுக்காய் சுட்டிகாட்டி
நம்பிக்கை தருவது
ஊக்கம்
போட்டியின் முடிவில்
கை தட்டுவது
பாராட்டு,
போட்டியின் போது
கை தட்டுவது
ஊக்கம்
தோல்விக்குப் பின்
சாய்ந்துக் கொள்வதற்கு
தோள் கொடுப்பது
ஆறுதல்,
வெல்வது இன்னும்
சாத்தியம் என்று
சொல்லி கொடுப்பது
ஊக்கம்
சக்கைப்
போடு போடுகிறாய்
என்று
எத்தளிப்பது அல்ல
ஊக்கம்,
சக்கையாகி போயினும்
மீதம் உள்ளதை
பதமாய் பிழிவது
ஊக்கம்
நடந்து விடுமென்ற
நப்பாசையில் வாழ்த்து
நல்குவது
அவர்கள் மேலுள்ள
அன்பை காட்டுகிறது,
முடியாததை, கடுமையானதை
முனைந்து முடிக்க
முயற்சிக்க ஊக்குவிப்பது
அவர்கள்
திறமையின் மேலுள்ள
நம்பிக்கையை காட்டுகிறது
ஊக்கத்தின்
தாக்கம்
சாமான்யன்
சாம்ராஜ்ஜியம் எய்ததிலும்,
அறியாதவர்
அரிதாய் சாதனை
பெரியதாய் புரிந்ததிலும்
நிறைந்துள்ளது;
ஆயினும் இவை
புவியை வென்ற
புல்லிலும்,
வெறுங்காற்றில்
வலை பிண்ணும்
கலை அறிந்த
சிலந்தியிடமும்,
மொத்த ஜீவராசிகளின்
சுயஊக்கத்தின் முன்
சுமார் தான்.
© Ravishankar Palanivelu, June 16, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.