Sunday, February 17, 2019

வேற்றுமையிலும் ஒற்றுமை

இரை
இறை,
தேடுதல் மூலமே
கூடும் பலன்

கல்
கள்,
அடிப்பதால் வரும்
அடிக்கடி பிரச்னை

வால்
வாள்,
நீண்டால் தான்
உண்டாகும் கலகம்

காலை
காளை,
உழைக்க எழுந்தால்
பிழைக்க முடியும்

ஒலி
ஒளி,
புலன் இரண்டு
பலன் பெறும்

தோல்
தோள்,
காப்பாற்றும் வேலையில்
ஒப்பற்ற துணை

உரை
உறை,
உள்ளே வைத்து
உள்ளதை பற்றி

போலி
போளி,
உண்மை நிலையறிய
கண்கள் பத்தாது

கரை
கறை,
வேறுப்பட்டவை பற்றி
கூறுகின்ற விளிம்பு

மூளை
மூலை,
எங்கிருந்தோ வந்து
இங்கு சங்கமிக்கும்

இம்மி வித்தியாசத்தில்
இமாலய வேற்றுமை
இருப்பினும், அதனிடை
இருக்கும் ஒற்றுமையும்
தமிழில் அழகாய்
கமழ்வதை களிப்போம்!

© Ravishankar Palanivelu, Feb 17, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments