Tuesday, December 10, 2019

நிழலின் நிஜம்; Translated version in English: The Summary of the Shadow

Shadows of clouds on the Waimea Canyon, Kauai, Hawaii

நிழல்:
ஒளிக் கடலில்
மிதந்த
இருட்டு தீவு,
வெளிச்ச கண்ணாடியில்
தெரிந்த
கறுப்பு பிம்பம்

நிழல்:
இருளை சூரியன்
சலவை செய்தும்
அகல 
மறுத்த
கறுப்புக் கறை

விடாமல் எங்கும்
கூடவே வருவது
நிழலின் 
நிலையான குணமானாலும்
அதில்
ஒளியின் தேவை
ஒளிந்து உள்ளது,
உடல் இயங்க
உதவிடும்
உயிர் போல

தூரலின் நிழல்
தூரத்து வானவில்;
அங்கு
சூரியனின் 
ஒரு நிறத்தை
ஏழாய்
கூறு போட்டதை
கூறிடும் நாம்,
பொருளின்
நிறம் எதுவானாலும்
நிழலின் நிறம்
என்றும் ஒன்றே
என்ற
கறுப்பு சமத்துவத்தை
கருத்தில் ஏன்
கொள்ளுவதில்லை?

ஒவ்வொரு 
பொருளும் 
ஒளியை எதிர்த்து
வென்றதற்கான
வெற்றித் தழும்பு
வெளியில் கிடக்கிறது:
வெயிலின் அருமை
தெரிய நிழலில்
அடுத்த முறை
ஒதுக்கும் போது
தழும்பிற்கு
தலை வணங்க
தவறாதீர்கள்

நிழலை
அடக்கத்தின் 
அடையாளமென
அறிவிக்கிறேன்;
ஏனேனில் அது
பொருளுக்கு 
முன்னால்
முளைக்கும்
முந்திரிக்கொட்டை அல்ல

பூமியின் நிழல்
தன்னில்
வீழ்ந்தால்
இருள்,
விண்ணில்
வீழ்ந்தால்
கிரகணம்;
இரண்டையும்
இணைத்து பார்க்கையில்
இரவிலும்
தெரியும்
முழு நிழல்
கிரகணம் என்பதை
கிரகித்துக்கொள்ளுங்கள்

நிழல்
எதிரில் வீழ்வதால்
எதிர்மறை இல்லை;
பொருளின் 
வரையரையை மட்டும் கொண்டு
தரையில் தழைத்த
வரைப்படம்

அப்படி 
அலசினால்:
எண்ணத்தின் நிழல்
வார்த்தை,
மௌனம் அல்ல;
அன்பின் நிழல்
அரவனைப்பு,
காழ்ப்பு அல்ல;
நிகழ்வின் நிழல்
ஞாபகம்,
அமைதி அல்ல;
மொழியின் நிழல்
இசை,
ஊமை அல்ல;
ஞானத்தின் நிழல்
கேள்வி,
அறியாமை அல்ல

நிழல்
நிஜத்தை
வெளிச்சம் போட்டுக்
காட்டுவதில்லை,
நிஜத்தின்
இன்னுமோர் 
பக்கத்தையும் 
பக்குவமாய் காண்பிப்பதில்லை,
பொருளின் 
சுருக்கத்தையே
சூசகமாக உரைக்கிறது.
——————————————————
Translation of the above poem by my friend Kirubakaran Pakkirisamy.

*The Summary of the Shadow*
——————————————

Its a dark island in a ocean of light
A black image on a mirror bright
Its a stain of darkness quite right
That the sun failed to wash away in an unsuccessful fight

It follows you everywhere
Without light it is nowhere
And light henceforth is its life giving air

The rainbow is the shadow of the rain
It splits the light into seven colors in no vain
Rest of the shadows are only in black stain
Is it the dark equality for earthly gain ?

Every thing fights with light 
The shadow is its wound in the fight
Dont forget the sacrifices of the wounded next 
Every time you take refuge in the shade in any pretext

A shadow is humility personified
It is never in the front but politely stays behind

Earth’s shadow on itself is night for sure
Its shadow in the sky is the eclipse hour
And if there’s a shadow in the night, 
Its the eclipse, right? 

Since..

A shadow is on the other end
It is not a contradiction, friend
But shows the boundaries of reality as art on ground

Hence..

The shadow of thought is not silence but word
The shadow of love is not hatred but an embrace solid
The shadow of action is not inaction but memory fond
The shadow of language is not silence but music and sound
The shadow of knowledge is not ignorance but questions on ground

A shadow cannot throw light on reality
It will just not show another perspective in quality
But summarizes the whole reality in its brevity
Understand, this is shadow’s beauty.

—-

© Ravishankar Palanivelu, December 8, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments

Photo Credit: Ravishankar Palanivelu

Monday, December 9, 2019

இலையா? அலையா?


இலையா? அலையா? (A poem on my high school reunion -  a gathering in Ricin, WI of high school friends living in North America in a friend's house by the Lake Michigan and during the onset of fall season)

கடைக்கு 
விடைப்பெற்ற
அரும்புகள்
தோரணைமாக
காரணமானாலும்,
பூக்களாகி
நாட்களானாலும்,
கூட்டமாய்
விரும்பி வந்து
தோட்டத்தில்
தொடங்கியதை
திரும்பி பார்த்த
இருநாள் திருவிழா

சிறகை விரித்த
பிறகும் 
கூட்டைப் பார்க்க
நாட்டம்...
நதியாகி நகர்ந்த
பிறகும்
அருவியை நெருங்க
ஆர்வம்....
குஞ்சு பொரித்த
பிறகும்
கரைக்கு திரும்ப
அக்கறை....

அடர்ந்த இருட்டில்
நடந்த போது,
தொடர்ந்த நண்பர்கள் 
கொணர்ந்த நட்பில்
கடந்த காலத்தை
கடைந்த போது,
திரண்ட 
வெண்ணையாய்
வெளியே வந்தன
கொள்ளை ஞாபகங்கள்

தொடர்ந்த
கிண்டல்
கொண்டாட்டத்தில்
தூக்கத்தை
தூக்கிப்போட்டாச்சு,
சிரிச்சதே
பேச்சாச்சு,
நகர்ந்ததை 
பகிர்ந்தாச்சு,
புதைந்ததை
கதைச்சாச்சு,
சுரந்ததை
கறந்தாச்சு,
மறந்ததை 
இடையில் 
நடந்ததை
நிரைச்சாச்சு

அத்தனை வகையிலும்
வத்தியாசம்,
இருப்பினும் 
இறுமாப்பு
இல்லாமல் 
ஒத்துப்போனது தான்
அதிசயம்
தலைக்கால் புரியவில்லை
இருப்பினும்
தலைதூக்கிய
கவலை ஒன்றை 
களைய இயலவில்லை;
வாட்டும் இந்த
மூட்டம்
மட்டும் விடாமல்
முட்டியதால் 
முழுதாய் அனுபவிக்க
முடியவில்லை

குழுமிய இடத்தின்
அழகிய சூழல்
ஆறுதல் ஏதாவது
கூறுகிறதா என்று
கூர்ந்து கவனித்தேன்

நரைத்த
இலைகள்
உதிர்வதைக் கண்டு
அதிர்ந்தேன்,
கிளையைவிட்டு விழுந்த 
பிறகும்
ஒட்டிக் கொள்ள
நப்பாசை கொள்ளும்
முட்டாளா நான்?

இல்லை

கரை
வரை வந்து
தோற்றாலும் 
சீற்றம் குறையாமல்
மீண்டும் மீண்டும் 
மெஷின் போல்
மெனக்கிடும்
மிஷிகன் 
அலையா நான்?

இலையுதிர் காலம்
இறப்பு உறுதியென்பதை
இயல்பாய் இயம்பியது;
வேதாளம் 
வேண்டுமானால்
மீண்டும் முருங்கை
மீது ஏறலாம்,
ஆனால் 
சரிந்த சருகுக்கு
புனர்ஜென்மம் இல்லை

கரையில்
தோற்பது போல்
தோன்றினாலும்
அலைகளின் பாடம் வேறு
அலைவரிசையில் உள்ளது;
கடலில் கிடந்தாலும்
கரையில்
கலந்துரையாட
மீண்டும் மீண்டும்
சந்திப்பதில் 
சங்கதி உள்ளது

இலையில்
இல்லை பதில்
அலையில் தான்
நிலைத்த உண்மை
நிற்பதைப் கண்டு 
அமைதி கொண்டேன் 

அடுத்த
அலையாய்
கரைச்சேர
அலைகடலென
திரளும்
நாள்குறிக்க
திட்டமிட்டாச்சு,
மறைந்திருந்த
கண்ணீரும்
அந்த 
ஏரிக்காற்றைப் போல் 
கரையேறியாச்சு




© Ravishankar Palanivelu, October 28, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments