© Ravishankar Palanivelu, August, 4, 2021, Tucson, USA (ravipalanivelu@gmail.com)
Saturday, August 14, 2021
அணிலிடமிருந்து அறிந்தது
Saturday, February 20, 2021
வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்?
வெட்டப்பட்ட மரங்களின் வெட்டிப் பேச்சாயிது?
வெட்கப்பட வைக்க வேட்கை கொண்டு
வெட்டு ஒன்று துண்டு இரண்டென்று
வெகுண்டு வெளியான வெளிப்படைப் பேச்சு
பதுக்கல், பேராசை, நச்சு கதம்பம்
ஒதுக்குவதில் வென்றது எங்கள் கூட்டுக் குடும்பம்
நல்லிணக்கத்திற்கு உலகில் நாங்கள் இலக்கணம்
தன்னலத்தை உன்னில் எஞ்சியது தலைக்கனம்
ஒளியையும் வாயுவையும் எடுத்துக் கொண்டாலும்
ஒளிக்காமல் தந்தோம் உயிர்கள் உண்டிட,
மானுடா, மற்றோர் உழைப்பை தானாய்
மானவாரியா எடுத்துக் கொள்வதற்கே எடுத்துக்காட்டானாய்!
காய்கள் தந்தேன் கனிகள் சேர்த்தேன்
தொய்வோர்க்கு கேட்காமலே நிழலையும் வார்த்தேன்
என்னிடம் இருந்து இத்தனையும் கொய்தாய்
என்பதையும் எண்ணாமல் என்னையும் மாய்த்தாய்
பிளந்த பின்னும் உபயோகம் ஆகுவேன்
தளபாடங்களாய் உனக்காக களம் புகுவேன்
ஒருமுறையும் பிறருக்கு உதவாத உனக்கு
மறுமுறை மரணம் எரிகையில் எனக்கு
வேரோடு சாய்த்து வேறென்ன சாதித்தாய்?
கூட்டோடு பறவைகளையும் பூச்சிகளையும் பாதித்தாய்
வீசும் தென்றலையும் மாசில்லா சூழலையும்
யோசனையின்றி இழந்தாய், தேவையின்றி உழலுகிறாய்
புரிவதில் குறை உன்னிடம் இருக்கையில்
அறியாதவனை ‘மரமண்டை’ என்பது மடமையன்றோ?
பரிணாம வளர்ச்சியில் மூத்தவனாய் பரிந்துரைக்கிறேன்
பறிப்பதற்கு பதிலாய் பதியம் போடவும்,
ஆதிக்கம் தவிர்க்கவும், சுற்றுப்புறச்சூழலை மதிக்கவும்
காத்திடவும், எங்களை விட்டு வைக்கவும்.
Tuesday, February 16, 2021
அஞ்சலி.. அஞ்சலி... Homage to Paadum Nila SPB
அஞ்சலி.. அஞ்சலி...
தேன் தோய்ந்த
உந்தன் குரல்,
கேட்காமலே வந்து
வலிக்காமலே வருடும்
தென்றலை போன்றது
அந்த
காந்த குரல்,
இறுகிய இரும்பு
இருதயங்களையும்
இறுதி வரை
உருக்கி ஈர்த்தது
உன் பாடல்களை
காலையில்
கடனாய் கறந்துக்கொண்டோம்,
பகலில்
பங்கு போட்டுக்கொண்டோம்,
இரவில்
இரவல் வாங்கிக்கொண்டோம்
இப்படியாக
தெரிந்தவனுக்கும்
அறியாதவனுக்கும்
பாகுபாடின்றி
வெகுவாக தந்தற்கு
வெகுமதி என்ன?
அள்ளி தந்த மேகத்திற்கே
கொள்ளி வைத்த
கொடுமை மட்டுமே
வழக்கமான
பழக்கம்
நீ பாடுவாய்
நாங்கள்
மெய்மறந்து வாயடைத்திருப்போம்
இன்றோ
நாங்கள் கதறுகிறோம்
இமைக்காமல் நீ ஏன்
அமைதியானாய்?
அனைத்திலும்
அநீதி
பாடிய உன்னை
பாடையில் பார்த்து
வாடியோர்க்கு நீங்கள்
பாடிய பாடல்களே
ஆறுதல் சொன்னது
நீவிர்
எல்லா தெய்வங்களுக்கும்
நல்லா பாடியிருக்க கூடாது
சுயநலமிக்க அந்த
கயவர்கள்
துரிதமாக தங்களை
திருடிக் கொண்டார்கள்
இருண்ட சோகம்
புரண்ட துக்கம்
திரண்ட இரங்கல்
திக்கெட்டிலும் எதனால்?
குரலால் மென்மையானவர்
குணத்தால் மேன்மையானவர்
என்பதில் ulladhu
என் பதில்