வெட்டப்பட்ட மரங்களின் வெட்டிப் பேச்சாயிது?
வெட்கப்பட வைக்க வேட்கை கொண்டு
வெட்டு ஒன்று துண்டு இரண்டென்று
வெகுண்டு வெளியான வெளிப்படைப் பேச்சு
பதுக்கல், பேராசை, நச்சு கதம்பம்
ஒதுக்குவதில் வென்றது எங்கள் கூட்டுக் குடும்பம்
நல்லிணக்கத்திற்கு உலகில் நாங்கள் இலக்கணம்
தன்னலத்தை உன்னில் எஞ்சியது தலைக்கனம்
ஒளியையும் வாயுவையும் எடுத்துக் கொண்டாலும்
ஒளிக்காமல் தந்தோம் உயிர்கள் உண்டிட,
மானுடா, மற்றோர் உழைப்பை தானாய்
மானவாரியா எடுத்துக் கொள்வதற்கே எடுத்துக்காட்டானாய்!
காய்கள் தந்தேன் கனிகள் சேர்த்தேன்
தொய்வோர்க்கு கேட்காமலே நிழலையும் வார்த்தேன்
என்னிடம் இருந்து இத்தனையும் கொய்தாய்
என்பதையும் எண்ணாமல் என்னையும் மாய்த்தாய்
பிளந்த பின்னும் உபயோகம் ஆகுவேன்
தளபாடங்களாய் உனக்காக களம் புகுவேன்
ஒருமுறையும் பிறருக்கு உதவாத உனக்கு
மறுமுறை மரணம் எரிகையில் எனக்கு
வேரோடு சாய்த்து வேறென்ன சாதித்தாய்?
கூட்டோடு பறவைகளையும் பூச்சிகளையும் பாதித்தாய்
வீசும் தென்றலையும் மாசில்லா சூழலையும்
யோசனையின்றி இழந்தாய், தேவையின்றி உழலுகிறாய்
புரிவதில் குறை உன்னிடம் இருக்கையில்
அறியாதவனை ‘மரமண்டை’ என்பது மடமையன்றோ?
பரிணாம வளர்ச்சியில் மூத்தவனாய் பரிந்துரைக்கிறேன்
பறிப்பதற்கு பதிலாய் பதியம் போடவும்,
ஆதிக்கம் தவிர்க்கவும், சுற்றுப்புறச்சூழலை மதிக்கவும்
காத்திடவும், எங்களை விட்டு வைக்கவும்.