அணிவதற்கு கூட உடை
அணிலுக்கு இல்லை,
ஆனாலும்
குடும்பத்தை
தனியாய் வளர்க்கும்
துணிவு உண்டு
அடைக்கலம்
கிடைத்த இடத்தில்
அடை காக்கும்
அடக்கம், அக்கறை
அட்டகாசம்
பதுக்க
ஏதுமில்லை
பொந்துக்குள்,
சந்ததியை
புதுபிக்கும்
சன்னதியாக அதை மாற்றிய
சங்கதி
சாகசம் தான்
சின்னஅறை தானென்று
சிணுங்காமல்
வளைந்து உறங்கி
வளைந்து கொடுத்து
போகும் போக்கு
வெகுவாக பிடித்தது
உள்ளதெல்லாம்
கொள்ளை போகும்
களவை தடுக்க
கதவு இல்லலையென
கதறவில்லை,
அந்த அணிலின்
பறந்த மனதை போலவே
திறந்தே இருந்தது
ஊட்டி வளர்ப்பதை
பூட்டி வைக்காததால்
வீணாகதோ என்ற
வினா எழலாம்,
மீளா சுவர் கொண்ட
மாளிகையில்
பொத்தி வைக்கும்
புத்தி மனிதனுடையது,
மறைக்க இடம்
கிடைத்தால் போதுமென்ற
நிறைவு பெறும்
நயம், நம்பிக்கை
ஐந்தறிவு பிராணியிடம்
ஐக்கியமாகியுள்ளது
வருங்காலத்தை பற்றி
வருந்தாமல்
கிடைத்ததில் திருப்தி
அடைந்து
நிகழும் தருணத்தில்
வாழும் வழி
அணிலிங்கு
அமைதியாய்
அறிவுறுத்தியது
© Ravishankar Palanivelu, August, 4, 2021, Tucson, USA (ravipalanivelu@gmail.com)