Tuesday, April 11, 2017

முறுவல்

சோம்பல் முறித்து
வெம்பிய சிரிப்பு
முறுவல்..
வளராத புன்னகையின் 
இளகிய இளவல்
முறுவல்..

சிரிப்பு செய்யுளென்றால்
புன்னகை புதுக்கவிதையென்றால்
முறுவல் ஹைக்கு தானே?

சிரிப்பின் விடியல்..
குறும்பின் வடியல்..
தயக்கத்ததின் தடயம்..
ஆமோதிப்பின் ஆதாம்..
ஆஹா,
சூழல் பலதில்
எழும் முதல்
மொழி முறுவல் தான்.

நிச்சயமாய்
நிகழ வேண்டும் என
நினைத்த போதெல்லாம்,
ஆசை கற்பனைகள்
ஆர்பரித்த போதெல்லாம்,
முதலில் 
முளைத்த வெள்ளி
முறுவல் தான்.

கால்நடையாய்
கடந்த காலத்தில்
கிடந்து,
ஆசையாய் ஞாபகங்களை
அசைப் போட்ட போது,
ஒசையின்றி ஒதுங்கிய
வாய் நுரை முறுவல்..
கடந்தவைகளை திரட்டி
கடைந்த போது
வெளியே வந்த
வெள்ளை வெண்ணை முறுவல்..

சொல்லி தராமலேயே
துல்லியமாய் எப்படி
கற்றுக்கொண்டோம்
முறுவலிக்க?

அரிதான ஆற்றல்
குழந்தையின்
முறுவலுக்கு உண்டு
அறிவாயா?
பூத்த முறுவலை
நேரில் பார்த்து
எதிர் முறுவல் 
உதிர்க்காதோர் 
உண்டோ?

பற்களையே
சொற்கள் ஆக்கிய
சிறப்பு புன்னகைக்குண்டு;
ஆனால், 
வாயை மட்டும் கொண்டே
வாக்கியம் பேசிய
முறுவலின்
விந்தையை எண்ணி நான்
வியந்தது உண்டு

அழுவதற்கு
கண்ணும் வாயும்
வேண்டும்,
முறுவலிக்கவோ வாயின்றி
வேறொன்றும் வேண்டாமே..

முறுவல் 
உன்
அமைதியின் அடையாளம்,
உன் நன்மைகளை
பறைசாற்றும் பணியாளி;
அதனால்
அடுத்த சந்திப்பில் 
எடுத்த உடனே
முறுவலித்துப் பார்,
எதிர்கொண்டோரோடு
நல்லதே தோன்ற
நல்லதோர் வாய்ப்புண்டு.

© Ravishankar Palanivelu, April 11, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

No comments:

Post a Comment