பாலியில் கொடுமை
பசி தான் என்றாலும்
பிறர் உணவை
பறித்தலை,
அவர் அனுமதியின்றி
அபகரித்தலை,
திருட்டு என்று
எடுப்பவரை தானே
சாடுகிறோம்,
ஆனால்,
பாலியல் விவகாரத்தில்
பலத்காரமாய்
தீண்டிய ஆணை
தண்டிக்காமல், மானத்தை
இழந்த பெண்ணையேன்
இழிக்கிறோம்?
தொட்டுவிட்ட
குட்டு வெளிப்பட்டதும்
பொட்டிப் பாம்பாய் ஆணின்
கொட்டமடங்கினாலும்
பட்ட துன்பம்
எட்டிப் பார்த்து
ஈட்டியாய் பாய்ந்து
வாட்டி வதைப்பது
பெண்ணை மட்டுமே!
எப்போதோ நடந்ததற்கு
இப்போது ஏன்
சர்ச்சை என
சப்பைக் கட்டும்
தப்பை என்னால்
ஒப்புக்கொள்ள இயலாது;
காலம் தாழ்ந்து வந்த
வெற்றிகளையும்
வெகுமதிகளையும் ஏற்றுக்கொள்ள
வெட்கப்படுகிறோமா?
வெறுக்கிறோமா?
பாலியல் தொல்லை
காயமாற நெடுங்
காலம் ஆகலாம்,
உள் காயத்தால்
உள்ளம் காயமானதால்
எழுந்த
தழும்பு மட்டும்
காலமாகாது
கொண்ட கொடுமையை
கொட்டி தீர்க்க
தட்டி கேட்க
சிலருக்கு
சில நாழிகைகளும்
பலருக்கு
பல வருடங்களும்
ஆகலாம்,
ஆனாலும் அதை
சொல்லும் தருணத்தை
நிர்ணயிக்கும் உரிமை
நிந்திக்கப்பட்டவர்களுடையது
துரிதமாய் சொன்னால்
உரிதான நடவடிக்கையை
உடனேவா
எடுத்துவிடப் போகிறோம்?
அடக்கமாய் இல்லாதது
எடுப்பாய் உடையணிந்தது
துடிப்பாய் பேசியது
வடிவாய் இருந்தது
பெண்ணின் தவறென்றும்,
ஆசைகளை அடக்கி
ஆள தெரியாத அப்பாவிகள்
ஆண்களென அவர்களுக்கு
வக்காளத்து வாங்கும்
வக்கீலாய் தானே
வந்திருப்போம்?
பாலியல் புரிந்தவரின்
புகழ், பெயர்
பதவி, பணம்
அந்தஸ்து, அதிகாரம்
சீறி வரும்
பெரும் புயல்,
அதற்கு
சரிசமமாக நின்று
சரியும் சருகு
எதிர் கொள்ளாதது
எதிர்ப்பார்த்தது தானே?
புகார்கள் ஒன்றும்
புதிரல்ல,
நம்ம மகள் சொன்னால்
நம்ப மறுப்போமா?
வேண்டியவள் என்றால்
வேடிக்கை பார்ப்போமா?
அருவருக்கத்தக்க பழக்கம்
அவர்களின்
அனுமதியின்றி கொள்ளும்
அணுகுமுறை தான்
அனு அனுவாய்
அவர்களை
சித்திரவதை செய்கிறது
பலவீனத்தை
பயன்படுத்தி
பலவந்தமாய்
பாலியல் பாவத்தை
புரிந்தவன்
பலசாலியல்ல;
வலிய வந்து
வலியை தந்து
வலிமையை காட்டி
வலையை விரிக்கும்
வஞ்சகசாலி
பாலியில் தொல்லைகளை
கண்மூடித்தனமாக செய்வதற்கும்
கண்டுக்கொள்ளாமல் மற்றவர்கள்
கை கழுவதற்கும்
ஆணிவேராய் இருப்பது
ஆண் ஆதிக்கமே!
© Ravishankar Palanivelu, Oct 29, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments