அழையாமலே வந்த
மழைப் போல்
தன்னாலே தழுவிய
தென்றலைப் போல்
அறிவிக்காமலே விழுந்த
அருவியைப் போல்
கனநொடியில் கருவுற்ற
கனவைப் போல்
கையேந்தியவர்களை தவிர்க்கும்
கண்களைப் போல்
பின்னலிட்டு மறைந்த
மின்னல் போல்
நொடியில் நேரும்
மடியும் நேரம்,
தானாய் வரும்
சாகும் தருணம்
ஒருநாள் மரணம்
வருவது நிச்சயம்,
இறுதிமூச்சு என்பது
உறுதியென உணர்ந்தால்,
ஒற்றை நொடியில்
பற்றுதல் பறந்தோடும்,
இந்த உண்மையில்
எந்த சந்தேகமில்லை
இருப்பினும் எதற்கு
இறப்பில் அச்சம்?
ஆயினும் மரணத்திலேன்
ஆனமட்டும் ஆதங்கம்?
நடப்புக்கு பின்
நடக்கப் போகும்
எதையும் அறியாமல்
சிதையில் புதைவதை,
சுகம் துக்கம்
அகம் அறியாததை,
சொந்த பந்தம்
செழிப்பதை காண
வழி இல்லாத்தை,
என்னை பற்றிய
புகழ் இகழ்
வாதம் பேதம்
எதிலும் ஒரு
போதிலும் செலுத்த
இயலாது தாக்கம்
இறப்பினால் என்பதை,
எதையும் இனிமேல்
என்னால் உணரமுடியாததை,
மரணம் தருமென்பதை
உணர்ந்த உடன்
உலர்ந்து போனேன்
உண்மையான ஐயத்தால்!
© Ravishankar Palanivelu, October 19, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments
© Ravishankar Palanivelu, October 19, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments
No comments:
Post a Comment