உண்மை ஊமையான போது
உறவினர் ஊனிழந்த போது
உறவு அறுந்த போது
உள்ளம் உடைந்த போது
உறவு பிறந்த போது
உளமாற களிப்பேரிய போது
தாளாமலே தாங்காமலே
தானே தோன்றும் ஊற்று
தானே கண்ணீர்
ஆனாலும் உடல்
வலிக்கும் போதும்
வலிய வெளிவந்த
துளியும் நீ தானே
இடியுடன் கூடிய வானமாய்
துன்பமிக்க வேளையிலும்
ஆனந்தம் ததும்பும் போதும்
வாயும் கண்களும் சேர்ந்தே
வார்க்கும் மழையே கண்ணீர்
இருப்பினும் இரண்டு வித்தியாசங்கள்...
மகிழ்ச்சியின் போது வாய்க்கும்
சோகத்தின் போது கண்களுக்கும்
அதிக வேலை..
மகிழ்ச்சியின் போது அளவாகவும்
சோகத்தின் போது வெள்ளமாகவும்
வெளியேறும் கண்ணீர்..
சோகத்தை கரைத்ததால்
கரித்தது கண்ணீரென்றால்
ஆனந்த கண்ணீரோ
தேனாய் ஏன் இனிக்கவில்லை?
எண்ணங்களை மொழிபெயர்க்க
வார்த்தைகள் உண்டு
சோகமான, சுகமான
எண்ணப்பெருக்கை
விரைவாய் விவரிக்க
கண்ணீர் மட்டும் தான் உண்டு
இறுகிய மனம்
உருகியதால்
பெருகிய வெள்ளம் தானோ
கண்ணீர்?
இல்லை
இதயம் பொங்கிய போது
எழுந்த சோக நீராவியெல்லாம்
கண்களில் முட்டி
பொழிந்த மழை தானோ கண்ணீர்?
மனதில் தானே
எண்ணங்களை பிழிந்தேன்
கண்களில் எப்படி
நீர் தாரை?
தேறிய கருத்தை
அறிவு பேச
வார்த்தையால் தெரிவிக்க
வாய் தான் தேவைப்படுகிறது
வதைக்கும் சோகத்தை
இதயம் பேச
கண்ணீராய் வெளியிட
கண்களை தான் தேர்வு செய்கிறது
இலை மறை காயாய்
ஏமாற்றும் மாந்தரை
இனம் கண்டு கொள்ள
முதலிலேயே நம்ப வேண்டாம்
அவர் விடும்
முதலை கண்ணீரை
மடை திறந்த வெள்ளமாய்
தடையின்றி வந்த கண்ணீரை
துடைத்த விரல்
தோழமையின் ஆதாரம்
ஆமை கண்ணீரை
வீணாக்காமல் குடித்த பட்டாம்பூச்சியோ
இயற்கை சுழற்சியின்
அழகிய அத்தாட்சி
மற்ற ஜீவராசிகள் கண்களை
மசகிட மட்டுமே கண்ணீரை
மெடக்கிடும் (ஆமை உட்பட)
மனித இனம் தானே
மனதில் உள்ள சோகங்களை
கழுவி தள்ளவும்
கண்ணீரை பயன்படுத்துகிறது
Supporting information:
மசகிட = lubricate
ஆமை கண்ணீரை வீணாக்காமல் குடித்த பட்டாம்பூச்சி = http://video.nationalgeographic.com/video/160303-butterflies-drink-turtle-tears
© Ravishankar Palanivelu, July 18, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)