Saturday, November 5, 2016

நரை










இது நரையல்ல..
இது நரையல்ல...
உரக்க உரைக்கிறேன் 

இது நரையல்ல...
வாழ்க்கை கடலின் கரையில் 
ஒதிங்கிய அனுபவ நுரை

இது நரையல்ல...
காலம் என்னை 
கவலை தண்ணீரில் 
வெளுத்து வாங்கி, சலவை செய்ததற்கு  
வெளிச்சமான சான்று

இது நரையல்ல...
காலகாலமாய் உணர்வுகள் 
உலையிலிட்ட அரிசியாய்
கொந்தளித்து வெந்து 
பொங்கி வெளியாகி 
தங்கிவிட்ட வெள்ளை குமிழிகள்

இது நரையல்ல...
முதுமை எனும் 
புதுமனை புகும் போது 
உடல் காய்ச்சிய பாலுக்கு 
தலையில் மட்டும் தோன்றும் 
தலையாய சாட்சி

இது நரையல்ல...
வாழ்க்கையின் அந்தியில், 
தாழும் உடலின் மேலே  
எழுந்த கறையுற்ற நிலா

இது நரையல்ல...
நிகழ்வுகளே வேள்வியாக 
உணர்வுகளே நெய்யாக
கடந்த காலத்தில் 
நடந்த யாகம் 
முடிந்த பின்னர் 
முடியில் சேர்ந்த 
புகையாத சாம்பல்   

இது நரையல்ல...
தோல் சுருக்கத்தின் 
இன்னொரு பரிணாமம் 

பட்ட உடல் இன்னலை 
வெட்ட வெளிச்சமாக்கும் 
உப்பு காய்ச்சிய கைகள்; 
மன அழுத்ததுடன் 
மன்றாடியதை 
மறைக்காமல் காட்டிடும் தலைகள் 

நரையொன்றும் 
வாழ்க்கையின் முடிவில் 
சரணடைய தூக்கும் 
வெள்ளை கொடி அல்ல.. 
வாழ்ந்த வாழ்க்கையின்
வெற்றியில் பெற்ற 
ஆறாத வீரத்தழும்புகள்

தோண்றியனைத்தும் 
மறைந்திடும்,
இயர்கையின் நியதி இது.. 
இதற்கேன் கவலை? இன்னும் 
நரைத்துவிடப்போகிறது 
நகைத்துவிடுங்கள்.

© Ravishankar Palanivelu, November 5, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

2 comments: