Sunday, June 25, 2017

நட்சத்திரங்கள்; Translated version in English: Stars


மலராத வெள்ளை மொட்டுக்கள்
உலராத வியர்வை துளிகள்
ஓயாத கண் சிமிட்டல்கள்
காயாத பனி துளிகள்

இரவில் விரைந்த
கரிய நங்கை
இடறிய போது
தெறித்து சிதறிய
தெள்ளிய முத்துக்கள்

அகன்ற வானத்தில்
அகலாத
அகல் விளக்குகள்
அல்லவா நீங்கள்?
இரவில்
தினந்தோறும் தீபாவளி என்பதற்கு
ஆதாரமன்றோ நீங்கள்?

கரிய வயலில்
அரிய விதைகளை
தெரியும்படி பயிரிட்ட
அறிவாளி யார்?

கோலத்தை
காலத்தே முடிக்காமல்
அலங்கோலமாய்
புள்ளி போட்டு விட்டு
தள்ளி போய் நின்ற
கள்ளி யார்?

மண்ணில்
விடிந்த பின்
வடிவாய் கோலமிடுவது
வழக்கம்..
விண்ணிலோ
அன்றாடம்
அந்தி
வந்த பின்னரே கோலமிடும்
விந்தை என்ன?

இரவில் தேடுவதாலா
இத்தனை கண்கள்?
கனவுகளுக்கு வழிகாட்டவா
கனிசமான மின்விளக்குகள்?

இத்தனை கண்களிருந்தும்
வாய் ஒன்று இல்லையே!
சத்தமில்லா வானம்
சாத்தியமானது எப்படி?
மயான அமைதியின்
மாயம் தான் என்ன?

திறந்த வெளியில்
திரிந்து வந்த
சூரியனை மறைக்கும் இரவின்
சூசகம் என்ன?
கறுப்பு போர்வை
இறுக்கமாய் இருக்க இரவு
பொறுத்திய பொத்தான்களில்
இருக்கிறதோ பதில்?

இன்றைய கொழுந்து
நாளைய சாம்பல்
என்று எரிப்பு
மேலும் ஒரு சலிப்பு
ஆனால் நீங்களோ
முன்பு எரிந்தீர்கள்
இன்று தெரிந்தீர்கள்

தூரத்து அழகு
கண்ணுக்கு பச்சை
பழமொழியின்
பொருள் என்ன-
கிட்ட வந்தால்
குட்டு வெளியாகும்;
அது போல்,
தொலைவால் தானே
தோன்றினீர்கள் நட்சத்திரங்களாய்?
உங்களில் யாரெல்லாம்
திங்களைப் போல்
பிரதிபலித்தீர்கள், எரியாமல்?


English translation by Kirubakaran Pakkirisamy

Stars

Little white buds yet to blossom
Still wet sweat beads looking winsome
Untiring eyes twinkling forever
These dew drops never dry for sure
 
When the dark maiden of the night tripped
These probably were the beads of pearl that spilled
 
An unfailing Festival of Lights every night
A proof that these were the lamps made it quite bright
 
Bright grains growing on a dark field
Whose idea was it to plant these rare seeds indeed  ?
 
Who played mischief with that mural on the sky
Started a masterpiece, left it half-way feeling shy ?
 
Its a custom to decorate the house in the morning
Whereas in the sky it is all festooned in the evening
 
Does the sky need so many eyes to search in the darkness ?
Or is it to guide the dreams that so many lights are in harness ?
 
When there are very many eyes
Why is it there is no mouth to utter words nice
How is it that a silent sky is possible
A silence of a graveyard that is perceptible
 
Is there a mystery behind the itinerant sun in the dark night
Or a plot to cover it with darkness buttoned down with star light
 
It's the norm what burns today becomes ash tomorrow
Where as you burned yesterday but today we see your glow

Golden and beautiful from a distance
At close inspection some differ in brilliance
The near by moon may have a beautiful countenance
Without the fire, against real stars planets don't stand a chance

© Ravishankar Palanivelu, June 23, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Tuesday, April 11, 2017

முறுவல்

சோம்பல் முறித்து
வெம்பிய சிரிப்பு
முறுவல்..
வளராத புன்னகையின் 
இளகிய இளவல்
முறுவல்..

சிரிப்பு செய்யுளென்றால்
புன்னகை புதுக்கவிதையென்றால்
முறுவல் ஹைக்கு தானே?

சிரிப்பின் விடியல்..
குறும்பின் வடியல்..
தயக்கத்ததின் தடயம்..
ஆமோதிப்பின் ஆதாம்..
ஆஹா,
சூழல் பலதில்
எழும் முதல்
மொழி முறுவல் தான்.

நிச்சயமாய்
நிகழ வேண்டும் என
நினைத்த போதெல்லாம்,
ஆசை கற்பனைகள்
ஆர்பரித்த போதெல்லாம்,
முதலில் 
முளைத்த வெள்ளி
முறுவல் தான்.

கால்நடையாய்
கடந்த காலத்தில்
கிடந்து,
ஆசையாய் ஞாபகங்களை
அசைப் போட்ட போது,
ஒசையின்றி ஒதுங்கிய
வாய் நுரை முறுவல்..
கடந்தவைகளை திரட்டி
கடைந்த போது
வெளியே வந்த
வெள்ளை வெண்ணை முறுவல்..

சொல்லி தராமலேயே
துல்லியமாய் எப்படி
கற்றுக்கொண்டோம்
முறுவலிக்க?

அரிதான ஆற்றல்
குழந்தையின்
முறுவலுக்கு உண்டு
அறிவாயா?
பூத்த முறுவலை
நேரில் பார்த்து
எதிர் முறுவல் 
உதிர்க்காதோர் 
உண்டோ?

பற்களையே
சொற்கள் ஆக்கிய
சிறப்பு புன்னகைக்குண்டு;
ஆனால், 
வாயை மட்டும் கொண்டே
வாக்கியம் பேசிய
முறுவலின்
விந்தையை எண்ணி நான்
வியந்தது உண்டு

அழுவதற்கு
கண்ணும் வாயும்
வேண்டும்,
முறுவலிக்கவோ வாயின்றி
வேறொன்றும் வேண்டாமே..

முறுவல் 
உன்
அமைதியின் அடையாளம்,
உன் நன்மைகளை
பறைசாற்றும் பணியாளி;
அதனால்
அடுத்த சந்திப்பில் 
எடுத்த உடனே
முறுவலித்துப் பார்,
எதிர்கொண்டோரோடு
நல்லதே தோன்ற
நல்லதோர் வாய்ப்புண்டு.

© Ravishankar Palanivelu, April 11, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Thursday, March 16, 2017

கனவு...கற்பனை...

கண் சரித்து யாசித்தால்
கனவு..
கண் விரித்து யோசித்தால்
கற்பனை..
இவை இரண்டிலுமே
இமைகள் இரண்டும்
அசைக்காத இறகுகளாய்
அமைதியாகவே இருப்பதெப்படி?

கனவு..
அடையாத ஆசையின்
கடைசி காட்சி,
கற்பனை..
சாதனை பயணத்தில்
முதல் முயற்சி

கனவு..
கண்கள் கதவு 
மூடியதும் தானே
மூண்ட கண்காட்சி,
கற்பனை..
கண்கள் கதவு
திறந்ததும் சிறகின்றி
பறந்த பட்சி.

கனவு..
கறுப்பு வெள்ளையில்
உருப்பெற்ற ஓவியம்,
ஒலியின்றி
ஒளிரும் ஒளிச்சித்திரம்
கற்பனை..
உள்ளக்கரை ஏறியும்
உலராத நினைவலை,
நெடுகி நீளும்
அடியேயில்லா அண்டம்

காசா பணமா
மோசம் போகப் போகிறது?
ஒசையின்றி இரண்டையும்
ஓசியல் செய்திடலாமே!
ஆதலால்,
கண்டிப்பாய்
கண்டிடு கனவை,
செம்மையாக
செய்திடு கற்பனையை

கனவு காண
கணப்பொழுதும் தயங்காதே,
தீராத ஆசை
பூராவும் அப்பொழுது தானே
பூர்த்தியாகிறது

கற்பனையை நிஜமாக்க
கற்றுக்கொள்,
முடியாதவற்றிர்கெல்லாம் உன்
முன் நிஜமாக
முகவரி  கிடைக்கும்,
பின்னர்,
கனவு காணும் 
அவசியமே இல்லாத 
அதிசயம் அரங்கேறும்.

© Ravishankar Palanivelu, March 16, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Sunday, January 22, 2017

விடியல்; Translated version in English: A Dawn

விடியல்
இடறிய இருளின் கையிலிருந்து 
சிதறிய வரவேற்பு சந்தனம் 

விடியல்
நாழிகை ஒன்று மட்டும் 
வாழ்ந்த கலங்கரை விளக்கம்

விடியல்
ஒல்லியாயினும் விரைவாய் வளரவிருக்கும் 
ஒளிப் பொடியன் 

விடியலென்ன, வானக் குடத்தின்  
விளிம்பில் இடித்து தளும்பி 
வெளியான வெளிச்ச சிதறலா? 
இல்லை 
உலகின் மறுபக்கத்திய அந்தியிலிருந்து  
புலர்ந்த பிரமிப்பான பிரதிபலிப்பா?

விடியல்...
சத்தமின்றி வானம் சூரியனை 
பெத்து எடுக்கும் பொழுது  
நித்தம் சிந்தும் இரத்தம்

யார் அங்கே புரளுவது?
சோர்வாய் எழுந்து, சோம்பல் 
முறித்த கண்களில் இப்படியாஒரு 
அறிவுக்கு எட்டாத அருஞ்சிவப்பு?

விடியல் ஏதோ வானத்தின் 
விளிம்பில் மட்டுமே ஒளிந்த
ஒளியென ஏமாற வேண்டாம் 
இடத்தை கொடுத்தவுடன் மொத்த  
மடத்தையும் பிடிக்கும் மாயாவியது 

காரிருள் போக்கும் மெழுகுவர்த்தியை 
யார் ஏற்றியது காலையில்? 
எரியும் சுடரோ கிழக்கில், 
அறிவாயா சில தருனத்தில் 
ஒழுகாமலே உருகாமலே மறைந்திடும் 
முழுவானமும் ஒளியால் நிறைந்திடும் 

என் விழிகளை மூடினாலும் 
எண்ணற்ற, இறைந்த, ஒற்றை 
கண்களை திறந்து நான் 
கண்டுகொண்டிருந்த கனவுகளை கலைத்ததேன்?

விடியல் போது மீதமிருந்த 
விண்மீன்கள் மீதொரு கேள்வி  
ஆதவன் எனும் பிரியமான 
காதலனை எதிர் பார்த்த
சிறுக்கி, நோக்கி வீசிய
நறுக்கிய நகங்களா நீங்கள்?
அத்தனை விடியல் அழகையும் 
பாத்தே தீரனும் என 
ஒத்த காலில் நின்று 
இத்தனை காலமாய் தவமிருந்து 
காத்திருந்தும், வந்தவுடன் ஏன் 
மொத்த கண்களும் மூடின?

கீழை வானில் மட்டுமே 
நுழை வாயில், ஆயினும் 
அழையாமலே நுழைந்த சூரியனோடு 
வழக்காட யாரும் விழையவில்லை,
வழக்கம் போல் விடிந்துவிட்டது

ஆனால் எண்ணற்ற ஏழைக்கு
இன்னல் இருட்டில் இருந்து 
இன்னும் விடியலே இல்லை

மனம் தளராதே மனிதனே 
தினம் விடியலில் பாடமுண்டு
கும்மிஇருட்டாயினும், ஒளி வருமென்ற 
நம்பிக்கை மாயினும், தளராதே! 
இந்த இரவு நிரந்தரமில்லை, 
வந்தே தீரும் புதுப்பகல்; 
அப்பிடியும் தோல்வியா? வருந்தாதே,
எப்படியும் இன்னொரு விடியலுண்டு.

-----------

English translation by Kirubakaran Pakkirisamy

A Dawn

Dawn, is it -
A dollop of cream that dropped from the ladle of darkness
Dawn, is it  -
An evanescent lighthouse that lasts till the noon
Dawn , is it-
The early childhood of the  daylight giant
Dawn - is it ? -
The water of light that splashed when the pot of darkness hit the sky
Dawn - is it ?
The brilliant reflection of a evening of the other half of this world
Dawn -
Did Mother sky bleed while delivering the Sun child ?
Dawn - is it ?
The beautiful eye color of  the Morning Lady even before she is out of her sheets
Dawn - is it ?
A shy conqueror of darkness who will take over the whole day
Dawn -
Who lighted the candle in the East ?
It seems to disappear without any trace of melted wax
Lighting up the whole sky before dying out
Dawn -
A real feast for the eyes after the unreal dream spectacle for the mental eye
Dawn -
A colorful dream even while waking up
Dawn
The few stars still visible  - are they the jewelry she threw in frustration waiting for the Sun lover ?
Why do those stars close their eyes after waiting anxiously for Dawn to uncover
Dawn
The dashing Sun gate crashes a party in the East
Nobody to contest and it is almost Dawn to again feast

Still, for the countless poor there is no dawn
Dont lose hope every morning teaches us a lesson
Never lose hope, darkness will end in light
And there will be a dawn after every night
Life is still not bright ?
Wait, there will be daylight after this night, quite right.

© Ravishankar Palanivelu, January 22, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Sunday, November 20, 2016

முகில்; Translated version in English: Cloud




Clouds over Seattle, WA (Sep 2016); photo by Ravi Palanivelu





















கேட்காமலே தோன்றிய
இலவச ஓவியத்தை
உயரே பார்த்தேன்
உயிரே போச்சு

எத்தனை எத்தனை
தலையனை
ஏது இதற்கு
ஈடு இணை

நீளமான நீலக்கடலில்
ஏராளமான
வெள்ளை தீவுகளா? இல்லை
தாராளமாய் அழகை 
கொள்ளையடித்து
செல்லும் கப்பல்களா?

நீர் குடித்ததால்
மிதக்கிறாயா?
மேலே ஏறிவிட்டோமென்ற
மிதப்பில் இருக்கிறாயா?

விடிந்து விட்ட பின்னும்
எழாமல் செய்யும்
சோர்வில் உதவும்
போர்வை நீயென்றால்,
முகம் காட்டா சோம்பேறியின்
முகவரியே தெரியலேயே

வேர்த்தால் துடைக்க
ஈரம் தோய்ந்த
ஓர் கைக்குட்டை நீயென்றால்,
ஒத்தி எடுப்பவரை
பத்தி ஒன்றும்
செய்தியே இல்லையே

கீறிய புண் 
ஆறியே மறைந்திட 
வைத்த பஞ்சு நீயென்றால்,
நீல வானத்தில்
குருதிக்கான
அறிகுறிகள்
அறவே இல்லையே

விரைந்து 
உறைந்த
மெழுகின்
ஒழுகல் நீயென்றால்,
எரியும் மெழுகுவர்த்தி
ஓரிடத்திலும் இல்லையே

உருவமின்றி
பெருகிய 
புகை நீயென்றால்,
மனமுருகி அர்ப்பணித்த
மணங்கமழ் ஊதுபத்தியேதும்
கண்ணில் தென்படவில்லையே

வெளியில் கைவிட்டு
காற்றில் 
பறந்த தாள் நீயென்றால்,
பறந்ததால் பதைத்து
பின்னால் ஓடி வந்த
சின்ன பிள்ளை யாரையும்
காணவில்லையே

நீலக்கடலில்
கரை வரை வந்து
குலையும் அலை
அலுக்காமல் அதையே
அலுவலாய் தினமும் செய்யும்..
நீலவானில் நீயோ
எங்கோ தோன்றி
நோக்கமே இன்றி
போக்கத்தவனாய் அலைகிறாய்

எட்டேயிருந்து மட்டும் பார்க்காமல்
எப்படி இருப்பாய் என
உன்னுள்ளேயே 
உட்கார்ந்து 
ஆராய வேண்டுமென
ஆவலுற்றேன்
உன்னிடம் வந்து சேர்ந்தாலோ
மாயாவிப் போல்
நீராவியாய் ஆகி
இருந்தும் இல்லாமல் இருப்பாய்,
அவதிப்பட்டு கிடைத்த பின்
அவசியமா என்று தோன்றும்
பொருள்முதல்வாத வாழ்க்கை போல.


Translation of the above poem by my friend Kirubakaran Pakkirisamy.

Cloud
------

The mural on the sky
Anonymously appeared on the sly
Turned my gaze up to watch
I lost my breath in a snatch

Beautiful pillows in the sky sweeping
Who is going to be there sleeping  ?

Are these isles of white brilliance ?
In a sea of blue magnificence
Or are these pirate ships in offense
Stealing the charming essence ?

Things float on water is scientific logic
You float with water what a magic

You blanket the sky at dawn
Letting it laze and further swoon
Who are you homeless goon ?

Are these cotton balls for the sky maiden
To remove her blue makeup clean
Or did somebody had that cotton bought
To stop an unseen bleeding spot

Shiny little blob of wax art in guise
But where is candle that sacrificed its spleen
A big puff of smoke on the skies
But the smoker is nowhere to be seen
A kids paper art flies
But no child in pursuit that keen

Waves on the blue seas
Work to the shores without cease
You there up on the sky so blue
Are you wandering aimlessly with no clue ?

I aspired for wealth and affluence
Perspired to get it in abundance
Inspired by your elegance
Worked to explore your substance
Material life and clouds turned into vapor
After quite a labor
Was is worth all the ardor ?


© Ravishankar Palanivelu, November 20, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Monday, November 14, 2016

நிலா Translated version in English: Moon Lesson

Super moon peeking over Tucson on November 14, 2016














உலாவி நிலா
ஒளி விழா நடத்துவதை
விளாவாரியாக விவரிக்க
அளவில்லா ஆர்வம்..
விழி வழியே வந்து உள்ளே
விழுந்துதையெல்லாம்
மொழிபெயர்க்க
விழைகிறேன், ஆயினும்
முழிக்கிறேன்

உன்
கறை மீது எனக்கு
அக்கறை இல்லை
வெள்ளை மீதம் மட்டில்
கொள்ளை ஆசை

நீ
கிட்ட வந்திட்ட
வட்ட நட்சத்திரம்
தள்ளி சென்றிட்ட
வெள்ளை சித்திரம்

நீ
இரவு தன்
கரிய கூந்தலில்
தெரியுமாறு வைத்து
கொண்ட
வெண்கொண்டை

நீ
விண்வெளியில்,
விளையாட்டின்
தொடக்கத்தின் போது
சுண்டி விட்ட
ஒண்டி காசு

நீ
இறுக்கி முடிந்த 
இருட்டு கூந்தலில் 
பொருந்த வைத்த 
திருகு பில்லை 

நீ
பூமி சட்டையிலிருந்து
வெம்பி தெறித்த
ஒத்தை பொத்தான்

நீ
அதிசிய துளியாய்
அவதரித்து
கருப்பு கடலில்
கருவுற்று
சிப்பியில் இருந்து
தப்பிய முத்து

சூரிய வெப்பத்தின்
வீரியத்தை குறைத்தாய்..
குளுமையை மட்டும்
குறையாமல் கொடுத்தாய்..
ஒளியின் தண்மையை
ஒளிக்காமல் பிரதிபலித்தாய்..
கடுமையை கழித்து
கள்ளதை களைந்து
நல்லதை நாசூக்காய்
நல்கும் சூசகமென்ன?
உன்னிடம் இருந்து
மானிட வர்க்கம்
இனியாவது கற்றிடவேண்டும்

English Translation by Kiru Pakkirisamy

I miserably fail to translate that vision into words nice
That riot of light while you walk the night skies

A million thoughts run through my minds eyes
But nary a word can I find that matches the beauty that vies

You, might have blemishes in your countenance
But that milky color is my romantic penance

You are a big round star so close and tempting
But when far away an enigmatic white painting

You, are a nice white flower worn
On that damsel, called Night’s, dark evening gown

You, are a silver coin tossed up in the air
That starts a celestial match in the sky so fair

You are the lonely diamond in the tiara
That contrast the lady’s dark mascara

You, are a bright button that flew away to the sky
When the earth changed its shirt for the night shy

You are a  drop of magic in an ocean deep and dark
That in an oysters’ womb turned into a pearl white and stark

You reduced the sun’s harshness
Showered on your coolness
Reflected well that brightness
Oh, Is this a message to humanity?
Should all of us follow that with alacrity?
Choose the kind words for the harsh ones
Share it all with gentle eloquence.

© Ravishankar Palanivelu, November 14, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

Saturday, November 5, 2016

நரை










இது நரையல்ல..
இது நரையல்ல...
உரக்க உரைக்கிறேன் 

இது நரையல்ல...
வாழ்க்கை கடலின் கரையில் 
ஒதிங்கிய அனுபவ நுரை

இது நரையல்ல...
காலம் என்னை 
கவலை தண்ணீரில் 
வெளுத்து வாங்கி, சலவை செய்ததற்கு  
வெளிச்சமான சான்று

இது நரையல்ல...
காலகாலமாய் உணர்வுகள் 
உலையிலிட்ட அரிசியாய்
கொந்தளித்து வெந்து 
பொங்கி வெளியாகி 
தங்கிவிட்ட வெள்ளை குமிழிகள்

இது நரையல்ல...
முதுமை எனும் 
புதுமனை புகும் போது 
உடல் காய்ச்சிய பாலுக்கு 
தலையில் மட்டும் தோன்றும் 
தலையாய சாட்சி

இது நரையல்ல...
வாழ்க்கையின் அந்தியில், 
தாழும் உடலின் மேலே  
எழுந்த கறையுற்ற நிலா

இது நரையல்ல...
நிகழ்வுகளே வேள்வியாக 
உணர்வுகளே நெய்யாக
கடந்த காலத்தில் 
நடந்த யாகம் 
முடிந்த பின்னர் 
முடியில் சேர்ந்த 
புகையாத சாம்பல்   

இது நரையல்ல...
தோல் சுருக்கத்தின் 
இன்னொரு பரிணாமம் 

பட்ட உடல் இன்னலை 
வெட்ட வெளிச்சமாக்கும் 
உப்பு காய்ச்சிய கைகள்; 
மன அழுத்ததுடன் 
மன்றாடியதை 
மறைக்காமல் காட்டிடும் தலைகள் 

நரையொன்றும் 
வாழ்க்கையின் முடிவில் 
சரணடைய தூக்கும் 
வெள்ளை கொடி அல்ல.. 
வாழ்ந்த வாழ்க்கையின்
வெற்றியில் பெற்ற 
ஆறாத வீரத்தழும்புகள்

தோண்றியனைத்தும் 
மறைந்திடும்,
இயர்கையின் நியதி இது.. 
இதற்கேன் கவலை? இன்னும் 
நரைத்துவிடப்போகிறது 
நகைத்துவிடுங்கள்.

© Ravishankar Palanivelu, November 5, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)