I. ஞாபகம் என்பது யாது?
கூட்டில் இருந்து வெளியேறிய நாள் முதல்
கூடவே இருக்கிறாய்,
கூடிகொண்டே போகிறாய்
தாயையும் விட
தந்தையும் விட
தமக்கையையும் விட
தமையனையும் விட
தாரத்தையும் விட
நீ தான் என்னோடு எப்பொழுதும்
தீபமாய் எரிந்து கொண்டு இருக்கிறாய்
நீ என்
நீங்கா நிழல்
நிகரற்ற நிழல்
உள் நிழல்..
வெளிச்சம் இருந்தும் நடுநிசியில்
வெளியே வீழாத நிழல் போன்ற
உள் நிழல்..
ஒளியின்றினும் உள்ளேயே
ஒளிந்துகொண்டிருக்கும்
உள் நிழல்
உன்
நிரந்தரத்தை
நிறம் பிரிக்க
விழைகிறேன்
சிறு வயதில் நிகழ்ந்த
சின்ன சின்ன சம்பவங்கள் கூட
சிதையாமல் என்னுள்
சித்திரமாய் எப்படி இருக்கிறாய்?
ஒருமுறை மட்டுமே நுகர்ந்த வாசனையென்றாலும்
உரு குலையாமல் பதிந்தது எப்படி?
உலுக்கிய முதல் இருட்டு இப்பவும் எப்படி
குலுக்கி எடுக்கிறது?
சுவை, ஸ்பரிசம், உறவு, காட்சி,
பகை, வெறுப்பு, யாசிப்பு, தேவை
எல்லாவற்றையும் பயின்று உணர்த்துவது எப்படி?
அதனினும் மேலாய்
தேவையான போது, நேரிட்ட போது
முகிலை விலக்கி வந்த சூரியனாய்
அகிலம் சேர்ந்த மழையாய்
சகிப்பில்லாத அன்னையின் அன்பாய்
கேட்காமலே தோன்றுவது எப்படி?
II. ஞாபகம் எங்கே உள்ளது?
நீ என்னுள்ளே எங்கு இருக்கிறாய்?
ஆராயோனும், எப்படி இருப்பாய்?
வடிவம் பார்க்கத்தான்
பிடிவாதமாய் இருக்கிறேன்
மூளையின் எந்த மூலையில் முகாமிட்டு உள்ளாய்?
துளையை துளைத்த காற்று இசையாவது போலா?
உளையின் அருகில் உலாவும் வெப்பம் போலா?
நாளங்களின் வரப்பில் மின்சாரமாகவா?
தற்செயலாய் உன்னை சந்திக்க நேர்ந்தால்
பிற்காலத்திலும் பார்க்க உன்னை சேமிப்பது எப்படி?
ஞாபகத்தை
ஞாபகம் கொள்வது எப்படி?
III. நான் இல்லாமல் நீ
நான் இறக்கும் போது நீ என்னவாய்?
அதற்கும் முன் உன்னை முழுதாய்
இறக்கி வைக்க வேண்டும்
யோசித்து பார்த்தேன்
ஞாபகங்களை பதிவு செய்ய ஆரமித்த போது தான்
மனித குலம் பிறந்தது
நாகரீகமும் பிறந்தது
நினைவு நாள், திருமண நாள், பிறந்த நாள்
வாக்கியம், சொல், எழுத்து
புத்தகம், கட்டுரை, கவிதை
நாட்குறிப்பு, நாடொளி, காணொளி,
அனைத்துமே உன்னை இறக்கி வைக்கும் பணிதானே?
அனைத்து ஞாபகங்களையும் இறக்கி வைக்கும்
வலிமை பெற்றால் மனிதன் நிரந்தரமாவான்
IV. நீ இல்லாமல் நான்
நான் இருக்கும் போது
நீ இறந்தால்
நான் என்னாவேன்?
உயிருள்ள பிணமாவேன்
காலைகடன் முதல் கண்ணுறங்கும் வரை
வேலைகள் அனைத்திற்கும் நீயே மூலம்
இல்லையேல் ஆவேன் நான் நிர்மூலம்
ஊணுக்கு ஆணிவேர் அணுக்கள்
அணுக்களின் ஆணிவேர் இரசாயணம்
ஞாபகம் இவ்விரண்டின் மேல்பரிமானம்
ஞாபகம் இல்லையேல் வாழ்கை இல்லை
ஞாபகம் இருக்கட்டும்
© Ravishankar Palanivelu, November 8, 2015, Tucson, USA (ravipalanivelu@gmail.com)
Awesome awesome
ReplyDeleteThank you Seenu.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete