Sunday, January 22, 2017

விடியல்; Translated version in English: A Dawn

விடியல்
இடறிய இருளின் கையிலிருந்து 
சிதறிய வரவேற்பு சந்தனம் 

விடியல்
நாழிகை ஒன்று மட்டும் 
வாழ்ந்த கலங்கரை விளக்கம்

விடியல்
ஒல்லியாயினும் விரைவாய் வளரவிருக்கும் 
ஒளிப் பொடியன் 

விடியலென்ன, வானக் குடத்தின்  
விளிம்பில் இடித்து தளும்பி 
வெளியான வெளிச்ச சிதறலா? 
இல்லை 
உலகின் மறுபக்கத்திய அந்தியிலிருந்து  
புலர்ந்த பிரமிப்பான பிரதிபலிப்பா?

விடியல்...
சத்தமின்றி வானம் சூரியனை 
பெத்து எடுக்கும் பொழுது  
நித்தம் சிந்தும் இரத்தம்

யார் அங்கே புரளுவது?
சோர்வாய் எழுந்து, சோம்பல் 
முறித்த கண்களில் இப்படியாஒரு 
அறிவுக்கு எட்டாத அருஞ்சிவப்பு?

விடியல் ஏதோ வானத்தின் 
விளிம்பில் மட்டுமே ஒளிந்த
ஒளியென ஏமாற வேண்டாம் 
இடத்தை கொடுத்தவுடன் மொத்த  
மடத்தையும் பிடிக்கும் மாயாவியது 

காரிருள் போக்கும் மெழுகுவர்த்தியை 
யார் ஏற்றியது காலையில்? 
எரியும் சுடரோ கிழக்கில், 
அறிவாயா சில தருனத்தில் 
ஒழுகாமலே உருகாமலே மறைந்திடும் 
முழுவானமும் ஒளியால் நிறைந்திடும் 

என் விழிகளை மூடினாலும் 
எண்ணற்ற, இறைந்த, ஒற்றை 
கண்களை திறந்து நான் 
கண்டுகொண்டிருந்த கனவுகளை கலைத்ததேன்?

விடியல் போது மீதமிருந்த 
விண்மீன்கள் மீதொரு கேள்வி  
ஆதவன் எனும் பிரியமான 
காதலனை எதிர் பார்த்த
சிறுக்கி, நோக்கி வீசிய
நறுக்கிய நகங்களா நீங்கள்?
அத்தனை விடியல் அழகையும் 
பாத்தே தீரனும் என 
ஒத்த காலில் நின்று 
இத்தனை காலமாய் தவமிருந்து 
காத்திருந்தும், வந்தவுடன் ஏன் 
மொத்த கண்களும் மூடின?

கீழை வானில் மட்டுமே 
நுழை வாயில், ஆயினும் 
அழையாமலே நுழைந்த சூரியனோடு 
வழக்காட யாரும் விழையவில்லை,
வழக்கம் போல் விடிந்துவிட்டது

ஆனால் எண்ணற்ற ஏழைக்கு
இன்னல் இருட்டில் இருந்து 
இன்னும் விடியலே இல்லை

மனம் தளராதே மனிதனே 
தினம் விடியலில் பாடமுண்டு
கும்மிஇருட்டாயினும், ஒளி வருமென்ற 
நம்பிக்கை மாயினும், தளராதே! 
இந்த இரவு நிரந்தரமில்லை, 
வந்தே தீரும் புதுப்பகல்; 
அப்பிடியும் தோல்வியா? வருந்தாதே,
எப்படியும் இன்னொரு விடியலுண்டு.

-----------

English translation by Kirubakaran Pakkirisamy

A Dawn

Dawn, is it -
A dollop of cream that dropped from the ladle of darkness
Dawn, is it  -
An evanescent lighthouse that lasts till the noon
Dawn , is it-
The early childhood of the  daylight giant
Dawn - is it ? -
The water of light that splashed when the pot of darkness hit the sky
Dawn - is it ?
The brilliant reflection of a evening of the other half of this world
Dawn -
Did Mother sky bleed while delivering the Sun child ?
Dawn - is it ?
The beautiful eye color of  the Morning Lady even before she is out of her sheets
Dawn - is it ?
A shy conqueror of darkness who will take over the whole day
Dawn -
Who lighted the candle in the East ?
It seems to disappear without any trace of melted wax
Lighting up the whole sky before dying out
Dawn -
A real feast for the eyes after the unreal dream spectacle for the mental eye
Dawn -
A colorful dream even while waking up
Dawn
The few stars still visible  - are they the jewelry she threw in frustration waiting for the Sun lover ?
Why do those stars close their eyes after waiting anxiously for Dawn to uncover
Dawn
The dashing Sun gate crashes a party in the East
Nobody to contest and it is almost Dawn to again feast

Still, for the countless poor there is no dawn
Dont lose hope every morning teaches us a lesson
Never lose hope, darkness will end in light
And there will be a dawn after every night
Life is still not bright ?
Wait, there will be daylight after this night, quite right.

© Ravishankar Palanivelu, January 22, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.