Thursday, March 16, 2017

கனவு...கற்பனை...

கண் சரித்து யாசித்தால்
கனவு..
கண் விரித்து யோசித்தால்
கற்பனை..
இவை இரண்டிலுமே
இமைகள் இரண்டும்
அசைக்காத இறகுகளாய்
அமைதியாகவே இருப்பதெப்படி?

கனவு..
அடையாத ஆசையின்
கடைசி காட்சி,
கற்பனை..
சாதனை பயணத்தில்
முதல் முயற்சி

கனவு..
கண்கள் கதவு 
மூடியதும் தானே
மூண்ட கண்காட்சி,
கற்பனை..
கண்கள் கதவு
திறந்ததும் சிறகின்றி
பறந்த பட்சி.

கனவு..
கறுப்பு வெள்ளையில்
உருப்பெற்ற ஓவியம்,
ஒலியின்றி
ஒளிரும் ஒளிச்சித்திரம்
கற்பனை..
உள்ளக்கரை ஏறியும்
உலராத நினைவலை,
நெடுகி நீளும்
அடியேயில்லா அண்டம்

காசா பணமா
மோசம் போகப் போகிறது?
ஒசையின்றி இரண்டையும்
ஓசியல் செய்திடலாமே!
ஆதலால்,
கண்டிப்பாய்
கண்டிடு கனவை,
செம்மையாக
செய்திடு கற்பனையை

கனவு காண
கணப்பொழுதும் தயங்காதே,
தீராத ஆசை
பூராவும் அப்பொழுது தானே
பூர்த்தியாகிறது

கற்பனையை நிஜமாக்க
கற்றுக்கொள்,
முடியாதவற்றிர்கெல்லாம் உன்
முன் நிஜமாக
முகவரி  கிடைக்கும்,
பின்னர்,
கனவு காணும் 
அவசியமே இல்லாத 
அதிசயம் அரங்கேறும்.

© Ravishankar Palanivelu, March 16, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.