Monday, July 29, 2019

இயற்கை ஆசான்; Translated version in English: Lessons from Nature


பிரிந்தே இருந்தாலும்
கூடவே இருக்க வேண்டும்
நதிக்கரைப் போல

இடைவெளி இருந்தாலும்
வெளிக்காட்டாமல் இருக்க வேண்டும்
வான்நிலாப் போல

மிளிர முடியாவிட்டாலும்
வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டும்
நட்சத்திரம் போல

அழையாத விருந்தாளியானாலும்
வந்தயிடத்தில் உபயோகப்பட வேண்டும்
மழைப் போல

ஆளுமை வேறானாலும்
கூட்டு முயற்சி வேண்டும்
வானவில்லைப் போல

மாண்டிடும் பொழுதிலும்
சக்தி உண்டாக்க வேண்டும்
நீர்வீழ்ச்சிப் போல

கொடூரமாக பறிக்கப்பட்டாலும்
கருனை காட்ட வேண்டும்
மல்லிகைப் போல

மறைந்து இருந்தாலும்
உதவியாய் இருக்க வேண்டும்
வேரைப் போல

மிதித்ததால் மடிந்தாலும்
நிமிர்ந்து எழுந்திட வேண்டும்
புல்வெளிப் போல

கொதிக்கும் வெய்யிலிலும்
பேதமின்றி தானம்தர வேண்டும்
மரம் போல

கீறல் விழுந்தாலும்
கதறலின்றி கசிய வேண்டும்
ரப்பர்மரம் போல

திருட வந்தாலும்
பெருக்க உதவ வேண்டும்
வண்டைப் போல

இறப்பே என்றாலும்
இலக்கில் கவனம் வேண்டும்
விட்டிலைப் போல

உடன்பிறப்போடு போட்டியானாலும்
விட்டுக் கொடுக்க வேண்டும்
குழல்துளைப் போல

கேட்போர் இல்லையென்றாலும்
தட்டாமல் கற்பிக்க வேண்டும்
இயற்கைப் போல


English translation of the above poem by Kiru Pakkirisamy:


Lessons from Nature
-----------------------------------------------
The water does part but like the river banks stay together
May not reach the sky, but shine like a moon and never leave brother
Not bright as the sun, but wait for the turn and glitter like a star
Uninvited you might be, but like a rain pour and nurture life from far
Be of different color but stay together and make a rainbow tall
About to fall to death but be powerful like a waterfall
Even when plucked, like a rose make those hands smell in class
Trampled upon to death but grow again like the perseverant grass
Blistering heat, but be a strong tree and provide shade in fairness to all
Even when cut, but like a forgiving maple tree ooze sweetness without call
Steal the honey but like a diligent bee spread the pollen
Rival your siblings but like the flute keys make music in unison
No time to watch ? No time to listen ?
Pause, say this to your belle or beau
Nature has a lesson for you.

© Ravishankar Palanivelu, July 29, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments

Thursday, July 25, 2019

வறட்சி



பிரச்சனை:

வேர் வைக்கும் 
மரம் வைக்க
மறந்தோம்
மறுத்தோம்;
வேர்வைக்கும்
நீர் இன்றி
நிர்மூலமாய்
நின்றோம்

இருந்த குழாயில்
திறந்த தருவாயில் 
வந்த காற்று
எந்தன் பெருமூச்சே

பச்சை எங்குமே
நிச்சயமாய் இல்லை,
கருவேல மரங்களின் 
ஊர்வலம் மட்டுமே
கண்ணில் தென்பட்டது

கார் மேகங்களை 
யார் ஒருவரும்
பார்க்கவில்லை;
வேகமாக கலைந்த
மேகத்திற்கும் துளியும்
ஈரமில்லை;
தானாக தோன்றும்
கானல் நீரைக்கூட
காணவில்லை;
கண்ணுக்கு எட்டியவரை
தண்ணீர் ஊர்தியும்
தென்படவில்லை

வானம் பார்த்த
பூமி போய்
தண்ணீர் கொணரும்
வாகனம் பார்த்த 
பூமி ஆனோம்

வானத்தில்
காணாமல் போன
வானவில் 
தண்ணீருக்காக காத்திருந்த
குடங்களின் வரிசையில்
கிடந்தது

வறட்சி, நாட்டில் தான் 
அறவேயில்லை நம்
அறிவில், சிந்தனையில்;
மாத்தி யோசிப்போம்
மாத்தவே யாசிப்போம்;
தீர்வு காண
தீர்க்கமாய் முயலுவோம்

தீர்வு 1:

பருவமழை தவறுதலின்
கரு உலகம்
ஒப்பற்ற வேகத்தில்
வெப்பம் அடைந்ததில்
வெளிப்படையாக உள்ளது 

உலகம் இது
உலோகம் அல்ல,
ஏறும் சூட்டை
ஏதுவாய் ஏற்றுக்கொள்ள

முன்னேற்றம், மேம்பாடு, சொகுசு
என்ற நாகரீக நிர்பந்தத்தால்
அதீதமாக புவி சூடான
அநீதியில் மேலை நாடுகளுக்கு 
அதிக பங்கு உண்டு;
நியாயம், இழப்பீடு அவர்கள் 
நிச்சயம் தர வேண்டும்;
இருப்பினும், அவர்களின் தவறுகளை 
திரும்பவும் வளரும் நாடுகள்
தெரிந்ததேயேன் புரிய வேண்டும்

அணல் அடங்க
அனைத்தும் செய்வோம்,
அணிலாகவாது உதவிட
அணி வகுப்போம்

மக்கள் தொகையை
அக்கறையுடன் கட்டுப்படுத்துவோம்;
பொருட்களின் மேல்
பேராசை துறப்போம்

ஒருமுறை உபயோகத்தை
ஒரேடியாக ஒழித்த 
தலைமுறை நாமாவோம்;
அலட்சியத்தாலும், சோம்பலாலும்,
விரைவதாலும் வருகின்ற
விரயம் விலக்குவோம்;
மக்காக இல்லாமல் 
மக்காத பொருட்களை 
எக்காலத்திலும் தவிர்ப்போம்;
சுற்றுப்புற சூழலை
பற்றுதலோடு பாதுகாத்து
முற்றிலும் மதிப்போம்

தீர்வு 2:

பருவ மழையை
பெருமளவில் சேமிக்க 
பழந்தமிழர் கண்டது 
ஒன்பது வழிகள்
என்பது மாறி,
விலைக்கு வாங்கும்
நிலை கண்டு 
உலையிலிட்ட அரிசியாய்
தலை கொதித்தது

பூமிக்கு வந்த மழையை 
சேமிக்க ஏன் மறந்தோம்?
பார் போற்றும்
நீர் மேலாண்மையால்
தழைத்து இருந்தோமே,
பிழை என்ன
இழைத்தோம் இடையில்?

ஆறுகள் மலடானதற்கு
ஆறுதலே இல்லை;
ஏரியாவில் எங்கும்
ஏரிகளே இல்லை;
கம்மாய்கள் இங்கே
கம்மியாகி போயின;
கரனையை தொலைக்க
காரணம் நாமே;
தாங்கல் இழந்ததை
தாங்க இயலவில்லை;
ஏந்தல் இருந்திருந்தால்
ஏந்துவோமா கையை?
ஊரணி ஊனமானதால்
ஊரேயில்லை இனி;
குளங்கள் மிஞ்சின
கண்களில் மட்டும்;
குட்டைகளை எல்லாம்
ஆட்டையப் போட்டோம்

இதைப் போல்
விதை நெல்லை
உட்கொள்ளும்
முட்டாள்தனத்தை
கட்டாயம் 
விட்டாக வேண்டும் 

வாய்க்காலில் நீர் வடிய
வாய்ப்பு கொடுப்போம்,
வடிகால் இல்லாமல்
விடிவுக்காலம் இல்லை

ஆறு, குளம், குட்டைகளில்
தூர் எடுக்க
மணல் வாருவோம்,
கொள்ளையடிக்க அல்ல;
நதிகளின் நடுவே
அணைகளை கட்டுவோம்
அனைவருக்கும் பயன்பட,
அபகரிக்க அல்ல

நூறு வருடங்களானாலும்
ஆறுகளை இணனப்போம்,
தானாக கடலில் 
வீணாவதை தடுக்க

நிலத்தடி நீரை
பலப்படுத்துவோம்;
விழுந்த மழைநீர் 
பாழாகாமல் இருக்க
மண்ணில் ஊற வேண்டுமென்பதை
மண்டையில் ஏற்று

அடுத்த 
மழை வந்தவுடன்
பழைய பிரச்சனையைன
வறட்சியை
மறந்திடாதே;
மேகத்தில் மறைந்த
நிலவாய்,
தூக்கத்தில் உறைந்த
நினைவுகளாய்
மீண்டும் வரும்;
எனவே
மீள வழிகள்
வேண்டியே தீரும்

வெள்ளம் வறட்சி 
இரு துருவங்கள்
இருப்பினும்
நிறைய தீர்வுகள்
இரண்டிற்கும் 
ஒன்றே என்பதால் 
இன்றே களமிறங்குவோம்!
வறட்சி போக்க 
புரட்சி செய்வோம்!


© Ravishankar Palanivelu, July 25, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments


Image Credit:AP; Copyright:Satellite image ¬©2019 Maxar Technologies via AP

Friday, July 5, 2019

விரும்பியவை வட்டத்துக்குள்; Translated version in English: World of Wishes

பட்டம்
கொடி;
இரண்டுமே
உயரே பறந்தாலும்,
பற்றை ஒற்றையாய்
பறை சாற்றி
விளக்கும் கொடியாய்
விளங்கவே விழைகிறேன்

கொடி
குமிழி;
இரண்டுமே
காற்றில் மிதந்தாலும்,
கால்கட்டு கட்டுபாடின்றி
சுதந்திரமாக சுகமாக
திமிராக திரியும்
குமிழியாகவே குழைகிறேன்

குமிழி,
குழல்;
இரண்டிலிருந்தும்
அடைப்பட்ட காற்று
விடுதலை பெற்றாலும்,
சுழன்ற காற்றை
உழன்று உருட்டி
இசையாய் ஈன்றெடுக்கும்
குழலாகவே ஆசைப்படுகிறேன்

குழல்
முகம்;
இரண்டுமே
உணர்ச்சியின் வடிகாலாய்
கண்களை கொண்டிருந்தாலும்,
எண்ணில்லா செயல்களுக்கு
தாயுமான மூளையும்
வாயும் செவியுமுள்ள
முகமாகவே முனைகிறேன்

முகம்
பௌர்ணமி;
இரண்டுமே
ஒளிர்ந்து மலர்ந்தாலும்,
பாரபட்சம் ஏதுமின்றி 
பாரிலுள்ள அனைவருக்கும்
சமளவில் ஒளிரும்  
பௌர்ணமியாகவே பிரியப்படுகிறேன்

பௌர்ணமி
சூரியன்;
இரண்டுமே
ஒளி தந்தாலும்,
கடன் வாங்கி
கடமை ஆற்றாமல்
சுயமாக வெளிச்சமிடும்
சூரியனையே விரும்புகிறேன் 

சூரியன்
பட்டம்;
இரண்டையுமே 
அன்னாந்து பார்த்திட
எந்நாளும் நேர்ந்தாலும்,
தலைக்கு மேலிருந்தாலும்
வாலையும் தலையுமாட்டி
இட்ட கட்டளையேற்கும்
பட்டமாகவே பரிதவிக்கிறேன்


English translation of the above poem by Kirubakaran Pakkirisamy:

World of Wishes
---------------------------------
I’d rather be a flag than a kite
Both fly high and bright
But I stand for one -
And would like to be a flag in your sight

I’d rather be a bubble than a flag
Both float and about
But I dont wanna be tied down -
So would be a bubble all around and blown

I’d rather be a flute than a bubble
Both release the wind in them
But I want to make music -
Hence would like to be a flute and be in sync

I’d rather be a face than flute
Both of their eyes are full of emotions
But I am more intelligent
Thus wanna be a face with a brain behind

I’d rather be a moon than a face
Both can be bright
But I am fair and just
Therefore I would be a moon and to all I shed light

I’d rather be a sun than a moon
Both light up the sky
But I am original and do not borrow
Thats why I’d like to be sun and shine all day

I’d rather be a kite than a sun
Both of them are way up there
But I like my strings -
And I’m happy to go hither and thither for it
My world and a gravity
I would not escape, even if I could

© Ravishankar Palanivelu, July 5, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments