Monday, December 9, 2019

இலையா? அலையா?


இலையா? அலையா? (A poem on my high school reunion -  a gathering in Ricin, WI of high school friends living in North America in a friend's house by the Lake Michigan and during the onset of fall season)

கடைக்கு 
விடைப்பெற்ற
அரும்புகள்
தோரணைமாக
காரணமானாலும்,
பூக்களாகி
நாட்களானாலும்,
கூட்டமாய்
விரும்பி வந்து
தோட்டத்தில்
தொடங்கியதை
திரும்பி பார்த்த
இருநாள் திருவிழா

சிறகை விரித்த
பிறகும் 
கூட்டைப் பார்க்க
நாட்டம்...
நதியாகி நகர்ந்த
பிறகும்
அருவியை நெருங்க
ஆர்வம்....
குஞ்சு பொரித்த
பிறகும்
கரைக்கு திரும்ப
அக்கறை....

அடர்ந்த இருட்டில்
நடந்த போது,
தொடர்ந்த நண்பர்கள் 
கொணர்ந்த நட்பில்
கடந்த காலத்தை
கடைந்த போது,
திரண்ட 
வெண்ணையாய்
வெளியே வந்தன
கொள்ளை ஞாபகங்கள்

தொடர்ந்த
கிண்டல்
கொண்டாட்டத்தில்
தூக்கத்தை
தூக்கிப்போட்டாச்சு,
சிரிச்சதே
பேச்சாச்சு,
நகர்ந்ததை 
பகிர்ந்தாச்சு,
புதைந்ததை
கதைச்சாச்சு,
சுரந்ததை
கறந்தாச்சு,
மறந்ததை 
இடையில் 
நடந்ததை
நிரைச்சாச்சு

அத்தனை வகையிலும்
வத்தியாசம்,
இருப்பினும் 
இறுமாப்பு
இல்லாமல் 
ஒத்துப்போனது தான்
அதிசயம்
தலைக்கால் புரியவில்லை
இருப்பினும்
தலைதூக்கிய
கவலை ஒன்றை 
களைய இயலவில்லை;
வாட்டும் இந்த
மூட்டம்
மட்டும் விடாமல்
முட்டியதால் 
முழுதாய் அனுபவிக்க
முடியவில்லை

குழுமிய இடத்தின்
அழகிய சூழல்
ஆறுதல் ஏதாவது
கூறுகிறதா என்று
கூர்ந்து கவனித்தேன்

நரைத்த
இலைகள்
உதிர்வதைக் கண்டு
அதிர்ந்தேன்,
கிளையைவிட்டு விழுந்த 
பிறகும்
ஒட்டிக் கொள்ள
நப்பாசை கொள்ளும்
முட்டாளா நான்?

இல்லை

கரை
வரை வந்து
தோற்றாலும் 
சீற்றம் குறையாமல்
மீண்டும் மீண்டும் 
மெஷின் போல்
மெனக்கிடும்
மிஷிகன் 
அலையா நான்?

இலையுதிர் காலம்
இறப்பு உறுதியென்பதை
இயல்பாய் இயம்பியது;
வேதாளம் 
வேண்டுமானால்
மீண்டும் முருங்கை
மீது ஏறலாம்,
ஆனால் 
சரிந்த சருகுக்கு
புனர்ஜென்மம் இல்லை

கரையில்
தோற்பது போல்
தோன்றினாலும்
அலைகளின் பாடம் வேறு
அலைவரிசையில் உள்ளது;
கடலில் கிடந்தாலும்
கரையில்
கலந்துரையாட
மீண்டும் மீண்டும்
சந்திப்பதில் 
சங்கதி உள்ளது

இலையில்
இல்லை பதில்
அலையில் தான்
நிலைத்த உண்மை
நிற்பதைப் கண்டு 
அமைதி கொண்டேன் 

அடுத்த
அலையாய்
கரைச்சேர
அலைகடலென
திரளும்
நாள்குறிக்க
திட்டமிட்டாச்சு,
மறைந்திருந்த
கண்ணீரும்
அந்த 
ஏரிக்காற்றைப் போல் 
கரையேறியாச்சு




© Ravishankar Palanivelu, October 28, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments

No comments:

Post a Comment