வேர் வைக்கும்
மரம் வைக்க
மறந்தோம்
மறுத்தோம்;
வேர்வைக்கும்
நீர் இன்றி
நிர்மூலமாய்
நின்றோம்
இருந்த குழாயில்
திறந்த தருவாயில்
வந்த காற்று
எந்தன் பெருமூச்சே
பச்சை எங்குமே
நிச்சயமாய் இல்லை,
கருவேல மரங்களின்
ஊர்வலம் மட்டுமே
கண்ணில் தென்பட்டது
கார் மேகங்களை
யார் ஒருவரும்
பார்க்கவில்லை;
வேகமாக கலைந்த
மேகத்திற்கும் துளியும்
ஈரமில்லை;
தானாக தோன்றும்
கானல் நீரைக்கூட
காணவில்லை;
கண்ணுக்கு எட்டியவரை
தண்ணீர் ஊர்தியும்
தென்படவில்லை
வானம் பார்த்த
பூமி போய்
தண்ணீர் கொணரும்
வாகனம் பார்த்த
பூமி ஆனோம்
வானத்தில்
காணாமல் போன
வானவில்
தண்ணீருக்காக காத்திருந்த
குடங்களின் வரிசையில்
கிடந்தது
வறட்சி, நாட்டில் தான்
அறவேயில்லை நம்
அறிவில், சிந்தனையில்;
மாத்தி யோசிப்போம்
மாத்தவே யாசிப்போம்;
தீர்வு காண
தீர்க்கமாய் முயலுவோம்
தீர்வு 1:
பருவமழை தவறுதலின்
கரு உலகம்
ஒப்பற்ற வேகத்தில்
வெப்பம் அடைந்ததில்
வெளிப்படையாக உள்ளது
உலகம் இது
உலோகம் அல்ல,
ஏறும் சூட்டை
ஏதுவாய் ஏற்றுக்கொள்ள
முன்னேற்றம், மேம்பாடு, சொகுசு
என்ற நாகரீக நிர்பந்தத்தால்
அதீதமாக புவி சூடான
அநீதியில் மேலை நாடுகளுக்கு
அதிக பங்கு உண்டு;
நியாயம், இழப்பீடு அவர்கள்
நிச்சயம் தர வேண்டும்;
இருப்பினும், அவர்களின் தவறுகளை
திரும்பவும் வளரும் நாடுகள்
தெரிந்ததேயேன் புரிய வேண்டும்?
அணல் அடங்க
அனைத்தும் செய்வோம்,
அணிலாகவாது உதவிட
அணி வகுப்போம்
மக்கள் தொகையை
அக்கறையுடன் கட்டுப்படுத்துவோம்;
பொருட்களின் மேல்
பேராசை துறப்போம்
ஒருமுறை உபயோகத்தை
ஒரேடியாக ஒழித்த
தலைமுறை நாமாவோம்;
அலட்சியத்தாலும், சோம்பலாலும்,
விரைவதாலும் வருகின்ற
விரயம் விலக்குவோம்;
மக்காக இல்லாமல்
மக்காத பொருட்களை
எக்காலத்திலும் தவிர்ப்போம்;
சுற்றுப்புற சூழலை
பற்றுதலோடு பாதுகாத்து
முற்றிலும் மதிப்போம்
தீர்வு 2:
பருவ மழையை
பெருமளவில் சேமிக்க
பழந்தமிழர் கண்டது
ஒன்பது வழிகள்
என்பது மாறி,
விலைக்கு வாங்கும்
நிலை கண்டு
உலையிலிட்ட அரிசியாய்
தலை கொதித்தது
பூமிக்கு வந்த மழையை
சேமிக்க ஏன் மறந்தோம்?
பார் போற்றும்
நீர் மேலாண்மையால்
தழைத்து இருந்தோமே,
பிழை என்ன
இழைத்தோம் இடையில்?
ஆறுகள் மலடானதற்கு
ஆறுதலே இல்லை;
ஏரியாவில் எங்கும்
ஏரிகளே இல்லை;
கம்மாய்கள் இங்கே
கம்மியாகி போயின;
கரனையை தொலைக்க
காரணம் நாமே;
தாங்கல் இழந்ததை
தாங்க இயலவில்லை;
ஏந்தல் இருந்திருந்தால்
ஏந்துவோமா கையை?
ஊரணி ஊனமானதால்
ஊரேயில்லை இனி;
குளங்கள் மிஞ்சின
கண்களில் மட்டும்;
குட்டைகளை எல்லாம்
ஆட்டையப் போட்டோம்
இதைப் போல்
விதை நெல்லை
உட்கொள்ளும்
முட்டாள்தனத்தை
கட்டாயம்
விட்டாக வேண்டும்
வாய்க்காலில் நீர் வடிய
வாய்ப்பு கொடுப்போம்,
வடிகால் இல்லாமல்
விடிவுக்காலம் இல்லை
ஆறு, குளம், குட்டைகளில்
தூர் எடுக்க
மணல் வாருவோம்,
கொள்ளையடிக்க அல்ல;
நதிகளின் நடுவே
அணைகளை கட்டுவோம்
அனைவருக்கும் பயன்பட,
அபகரிக்க அல்ல
நூறு வருடங்களானாலும்
ஆறுகளை இணனப்போம்,
தானாக கடலில்
வீணாவதை தடுக்க
நிலத்தடி நீரை
பலப்படுத்துவோம்;
விழுந்த மழைநீர்
பாழாகாமல் இருக்க
மண்ணில் ஊற வேண்டுமென்பதை
மண்டையில் ஏற்று
அடுத்த
மழை வந்தவுடன்
பழைய பிரச்சனையைன
வறட்சியை
மறந்திடாதே;
மேகத்தில் மறைந்த
நிலவாய்,
தூக்கத்தில் உறைந்த
நினைவுகளாய்
மீண்டும் வரும்;
எனவே
மீள வழிகள்
வேண்டியே தீரும்
வெள்ளம் வறட்சி
இரு துருவங்கள்
இருப்பினும்
நிறைய தீர்வுகள்
இரண்டிற்கும்
ஒன்றே என்பதால்
இன்றே களமிறங்குவோம்!
வறட்சி போக்க
புரட்சி செய்வோம்!
© Ravishankar Palanivelu, July 25, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments
Image Credit:AP; Copyright:Satellite image ©2019 Maxar Technologies via AP