Sunday, February 17, 2019

வேற்றுமையிலும் ஒற்றுமை

இரை
இறை,
தேடுதல் மூலமே
கூடும் பலன்

கல்
கள்,
அடிப்பதால் வரும்
அடிக்கடி பிரச்னை

வால்
வாள்,
நீண்டால் தான்
உண்டாகும் கலகம்

காலை
காளை,
உழைக்க எழுந்தால்
பிழைக்க முடியும்

ஒலி
ஒளி,
புலன் இரண்டு
பலன் பெறும்

தோல்
தோள்,
காப்பாற்றும் வேலையில்
ஒப்பற்ற துணை

உரை
உறை,
உள்ளே வைத்து
உள்ளதை பற்றி

போலி
போளி,
உண்மை நிலையறிய
கண்கள் பத்தாது

கரை
கறை,
வேறுப்பட்டவை பற்றி
கூறுகின்ற விளிம்பு

மூளை
மூலை,
எங்கிருந்தோ வந்து
இங்கு சங்கமிக்கும்

இம்மி வித்தியாசத்தில்
இமாலய வேற்றுமை
இருப்பினும், அதனிடை
இருக்கும் ஒற்றுமையும்
தமிழில் அழகாய்
கமழ்வதை களிப்போம்!

© Ravishankar Palanivelu, Feb 17, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments

Wednesday, December 19, 2018

கெட்டதில் நல்லது; Translated version in English: The Brighter Side

இத்து போனாலும்
முத்துப் போல
செத்தும் ஈர்க்க வேண்டும் 

தங்கிடும் பொழுதிலும்
நங்கூரம் போல
தாங்கி பிடித்திட வேண்டும் 

புதைந்தே போயிடினும்
விதைப் போல
பதைக்காமல் வெளிவர வேண்டும்

சரிந்திடும் போதிலும் 
சருகைப் போல
எருவாகி பயன்பட வேண்டும்

யார் அறியாவிடினும்
வேர் போல
நீர் தந்திட வேண்டும் 

நிலைக் குலைந்தாலும்
குலைவாழைப் போல
தலைக் குனிய வேண்டும் 

புழுங்கி தவித்தாலும்
குழல்காற்றுப் போல
உழன்று இசையாக வேண்டும் 

வீணாக்க நேரிட்டாலும்
கனாக்களைப் போல
கணக்கில்லாமல் கரைத்திட வேண்டும்

கூன் வீழ்ந்திடினும்
வானவில் போல
ஆனவுடன் மறைய வேண்டும்

நிர்பந்தத்தால் மடிந்திடினும்
கற்பூரம் போல
முற்றிலும் உருமாற வேண்டும்

வழி தவறினாலும் 
குமிழி போல
மகிழ்வதை தொடர்ந்திட வேண்டும் 

கட்டுப்பாட்டில் இருந்தாலும் 
பட்டம் போல
ஆட்டம் போட வேண்டும்

சீமையே தொலைந்தாலும்
ஆமைப் போல
அமைதி காத்திட வேண்டும் 

வன்மையே கலந்திருப்பினும்
அன்னம் போல
உன்னதத்தை பிரித்தெடுக்க வேண்டும் 

இன்னல் இக்கட்டு
என்றும் இருக்கும் 
என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்

குறைகளின் வீரியத்தை
குறைக்க இயன்ற
வரை முயன்றிட வேண்டும் 

கிடைத்ததை கொண்டு
விடையைக் விடாமல்
கடைந்து எடுத்திட வேண்டும் 

கஷ்டத்திலும் நல்லது
நிச்சயம் சொட்டாவது
மிச்சமுள்ளதை உணர்ந்திட வேண்டும்

வன்மையிலும் ஒரு
நன்மையை திரித்தெடுக்கும்
தன்மையை கற்றிட வேண்டும்

--------------------------------------
Translation of the above poem by my friend Kirubakaran Pakkirisamy

The Brighter Side

Dead it might be
Still beautiful to the eyes to behold
It is the story of the pearl well told

Even dropped down to the sea
It is the anchor that had the hold
That should be a lesson in the cold

Buried and pushed 
Rise above solid ground
Like the sprouting seed and be found

Dried up in the sun and free
Like the leaves in the soil that fold
Be useful and help sprout again from seed

Hidden and unseen
Feed the plant with water and food
You are the root that does good

Trapped inside and trying to be free
Still make music like the wind in the flute
And make merry out of the misery in the chute

Just don't kill time
While away in dreams big and grand too
For one day one of them will become true

Forced to bend
Be like the rainbow bright and evanescent
And let the ignominy vanish without any dissent

Forced and put to the fire 
Glow like the candle bright
And share with the world your light

Lost and floating wayward
Be composed like the bubble in the air
And spread cheer to all those near and fair

Tied and pulled
Dance like the kite in the wind
And stay happy and cheerful in the mind

Lost battles and challenging war
Stay calm and keep moving forward
Like the perseverant turtle in the current onward

Violence all around you
Stay clear and free from oil like water
Encourage peace and let the vile shatter

Life is not a bed of roses
Problems and challenges are the way of life
Accept and handle, it is not really a strife

Every human has weaknesses
Be not discouraged and lose heart
Lower their impact every moment and get a head start

Stumped for an answer
Do good with whatever in hand
And mine the gold from the sand

Faced with distress
Have heart there is always hope and chance
Even the driest of desert has an oasis in its expanse

Misery or Penury 
There is some learning in the stride
You will come out winning on the other side

© Ravishankar Palanivelu, Dec 19, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments 

Monday, October 29, 2018

பாலியில் கொடுமை


பாலியில் கொடுமை

பசி தான் என்றாலும்
பிறர் உணவை
பறித்தலை,
அவர் அனுமதியின்றி
அபகரித்தலை,
திருட்டு என்று
எடுப்பவரை தானே
சாடுகிறோம்,
ஆனால்,
பாலியல் விவகாரத்தில்
பலத்காரமாய்
தீண்டிய ஆணை
தண்டிக்காமல், மானத்தை
இழந்த பெண்ணையேன்
இழிக்கிறோம்?

தொட்டுவிட்ட
குட்டு வெளிப்பட்டதும்
பொட்டிப் பாம்பாய் ஆணின்
கொட்டமடங்கினாலும்
பட்ட துன்பம்
எட்டிப் பார்த்து
ஈட்டியாய் பாய்ந்து
வாட்டி வதைப்பது
பெண்ணை மட்டுமே!

எப்போதோ நடந்ததற்கு
இப்போது ஏன்
சர்ச்சை என
சப்பைக் கட்டும்
தப்பை என்னால்
ஒப்புக்கொள்ள இயலாது;
காலம் தாழ்ந்து வந்த
வெற்றிகளையும்
வெகுமதிகளையும் ஏற்றுக்கொள்ள
வெட்கப்படுகிறோமா?
வெறுக்கிறோமா?

பாலியல் தொல்லை
காயமாற நெடுங்
காலம் ஆகலாம்,
உள் காயத்தால்
உள்ளம் காயமானதால்
எழுந்த
தழும்பு மட்டும்
காலமாகாது

கொண்ட கொடுமையை
கொட்டி தீர்க்க
தட்டி கேட்க
சிலருக்கு
சில நாழிகைகளும்
பலருக்கு
பல வருடங்களும்
ஆகலாம்,
ஆனாலும் அதை
சொல்லும் தருணத்தை
நிர்ணயிக்கும் உரிமை
நிந்திக்கப்பட்டவர்களுடையது

துரிதமாய் சொன்னால்
உரிதான நடவடிக்கையை
உடனேவா
எடுத்துவிடப் போகிறோம்?

அடக்கமாய் இல்லாதது
எடுப்பாய் உடையணிந்தது
துடிப்பாய் பேசியது
வடிவாய் இருந்தது
பெண்ணின் தவறென்றும்,
ஆசைகளை அடக்கி
ஆள தெரியாத அப்பாவிகள்
ஆண்களென அவர்களுக்கு
வக்காளத்து வாங்கும்
வக்கீலாய் தானே
வந்திருப்போம்?

பாலியல் புரிந்தவரின்
புகழ், பெயர்
பதவி, பணம்
அந்தஸ்து, அதிகாரம்
சீறி வரும்
பெரும் புயல்,
அதற்கு
சரிசமமாக நின்று
சரியும் சருகு
எதிர் கொள்ளாதது
எதிர்ப்பார்த்தது தானே?

புகார்கள் ஒன்றும்
புதிரல்ல,
நம்ம மகள் சொன்னால்
நம்ப மறுப்போமா?
வேண்டியவள் என்றால்
வேடிக்கை பார்ப்போமா?

அருவருக்கத்தக்க பழக்கம்
அவர்களின்
அனுமதியின்றி கொள்ளும்
அணுகுமுறை தான்
அனு அனுவாய்
அவர்களை
சித்திரவதை செய்கிறது

பலவீனத்தை
பயன்படுத்தி
பலவந்தமாய்
பாலியல் பாவத்தை
புரிந்தவன்
பலசாலியல்ல;
வலிய வந்து
வலியை தந்து
வலிமையை காட்டி
வலையை விரிக்கும்
வஞ்சகசாலி

பாலியில் தொல்லைகளை
கண்மூடித்தனமாக செய்வதற்கும்
கண்டுக்கொள்ளாமல் மற்றவர்கள்
கை கழுவதற்கும்
ஆணிவேராய் இருப்பது
ஆண் ஆதிக்கமே!

© Ravishankar Palanivelu, Oct 29, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments 


Friday, October 19, 2018

மரணத்தின் மேலேன் பயம் வரணும்?

அழையாமலே வந்த 
மழைப் போல்

தன்னாலே தழுவிய
தென்றலைப் போல் 

அறிவிக்காமலே விழுந்த
அருவியைப் போல்

கனநொடியில் கருவுற்ற
கனவைப் போல்

கையேந்தியவர்களை தவிர்க்கும்
கண்களைப் போல்

பின்னலிட்டு மறைந்த
மின்னல் போல்

நொடியில் நேரும்
மடியும் நேரம்,
தானாய் வரும்
சாகும் தருணம்

ஒருநாள் மரணம்
வருவது நிச்சயம்,
இறுதிமூச்சு என்பது
உறுதியென உணர்ந்தால்,
ஒற்றை நொடியில்
பற்றுதல் பறந்தோடும்,
இந்த உண்மையில்
எந்த சந்தேகமில்லை
இருப்பினும் எதற்கு 
இறப்பில் அச்சம்?
ஆயினும் மரணத்திலேன்
ஆனமட்டும் ஆதங்கம்?

நடப்புக்கு பின்
நடக்கப் போகும்
எதையும் அறியாமல்
சிதையில் புதைவதை,
சுகம் துக்கம்
அகம் அறியாததை,
சொந்த பந்தம்
செழிப்பதை காண
வழி இல்லாத்தை,
என்னை பற்றிய
புகழ் இகழ்
வாதம் பேதம்
எதிலும் ஒரு
போதிலும் செலுத்த 
இயலாது தாக்கம்
இறப்பினால் என்பதை,
எதையும் இனிமேல்
என்னால் உணரமுடியாததை,
மரணம் தருமென்பதை
உணர்ந்த உடன்
உலர்ந்து போனேன் 
உண்மையான ஐயத்தால்!

© Ravishankar Palanivelu, October 19, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments 

Wednesday, September 26, 2018

தேர்ந்தெடுக்க முடியுமா?; Translated version in English: Love to know

தேர்ந்தெடுக்க முடியுமா?

சண்டை வேண்டும்,
ஊடல் என்றால்
மட்டும்

மருந்து வேண்டும்,
அம்மா தந்தால்
மட்டும்

மழை வேண்டும்,
வானவில் வந்தால்
மட்டும் 

வலி வேண்டும்,
உன் பிரிவால்
மட்டும்

புதைய வேண்டும்,
அவளின் மடியில்
மட்டும்

மடிய வேண்டும்,
என் கோபம்
மட்டும் 

பின்னடைய வேண்டும்,
முன்னேறிடும் மகளிடம்
மட்டும் 

கண்மூட வேண்டும்,
மல்லிகையை முகற
மட்டும் 

சுரண்ட வேண்டும்,
அடிவண்டல் உணவை
மட்டும் 

தோற்க வேண்டும்,
குழந்தையுடன் விளையாட்டில்
மட்டும்

தொலைய வேண்டும்,
காட்டில் நான்
மட்டும் 

மறைக்க வேண்டும்,
தானமாய் தந்ததை
மட்டும்

மாற வேண்டும்,
மன்னிப்பு கேட்க
மட்டும் 

வாழ்வில் கிடைக்குமா,
தேர்ந்தெடுக்கும் சக்தி
மட்டும்?


English translation of the above poem by Kiru Pakkirisamy:

*Love to know*
---------------------
Love to argue
If only there are  hugs and kisses after that

Love to take the medication
If just there is a mothers embrace following

Love to get drenched in the rain
If only there is a rainbow to watch

Love to bear the pain
If I just knew you would come back

Love to rest my head
If only it were on your lap

Love to see it die
If it just was my temper

Love to fall behind
If only it were my children getting ahead

Love to close my eyes
If it just were to smell the roses

Love to eat the crumbs
If only it were from the cookies

Love to lose
If it just were in a game with my child

Love to lose myself
If only it were in those green woods

Love to hide
If it just were the charity I did

Love to change
If only it were only to ask for forgiveness

But ..
Would life would ever offer me these choices ?
*Love to know*



© Ravishankar Palanivelu, Sep 26, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments 

Friday, September 7, 2018

கவலை இல்லை; Translated version in English: Worries be gone

முத்தத்தில்,
நதி நகரும்
சத்தத்தில்,
கவலை இல்லை

தானத்தில்,
எல்லை இல்லா
வானத்தில்,
கவலை இல்லை

நிழலில்,
நாதம் தரும்
குழலில்,
கவலை இல்லை

குமுழியில்,
கன்னத்தில் விழும்
குழியில்,
கவலை இல்லை

தாலாட்டலில்,
நயமான நாயின்
வாலாட்டலில்,
கவலை இல்லை

தென்றலில்,
பூவாசம் கடந்து
சென்றதில்,
கவலை இல்லை

தழுவலில்,
கையில் நுங்கின்
நழுவலில்,
கவலை இல்லை

அயர்ந்ததில்,
பிள்ளைகள் நம்மைவிட
உயர்ந்ததில்,
கவலை இல்லை

பனியில்,
தானாக பழுக்கும்
கனியில்,
கவலை இல்லை

வருணத்தில்,
ஒழுகலை உறிஞ்சும்
தருணத்தில்,
கவலை இல்லை

அலையில்,
மழையினால் அசையும் 
இலையில்,
கவலை இல்லை

இத்தனை இருந்தும்
வாழ்க்கையில்
அணு அளவும்
கவலை இல்லையென்ற
நிலை வரும் 
தருணம்
மரணம்,
அதுவரை எல்லா
நிமிடமும்
கவலை எனும்
வலையில் விழாமலிருக்க
கவனம் செலுத்துவோம்!

--------------------------------------------------------------------------------------------------------------------------
English translation of this poem by Kirubakaran Pakirisamy:


Worries be gone 
------------------------

In the sweetness of the kiss lingering
And in the rustle of the stream meandering
Worries are gone

Doing that charity that was appreciated
And in the sky so vast and expanded
Worries are gone

In the hot sun the shade is welcoming
And he gentle music of the flute is soothing
Worries are gone

That floating bubble is so fascinating
And the dimple in the cheeks charming
Worries are gone

The warming lullaby of the new mother
And the love of the tail-wagging pet is dearer
Worries are gone

The breeze so soft and vibrant
And the smell of the garden so fragrant
Worries are gone

The embrace so gentle and warm
And juices of the apple on my arm
Worries are gone

Unwinding and enjoying the retirement
And the progenies topping parent’s accomplishment
Worries are gone

The whiteness of the snow so cute
And in the joy of tasting a ripe fruit
Worries are gone

The majesty of the steady rain 
And dew drop on the tongue like champagne
Worries are gone

The rollicking wave on the shore
And the swaying leaves in the ran to the fore
Worries are gone

So many joys and  pleasures to our health
One thing relieves all worries fully is - death
Till that day arrives nothing to fear
So many pleasures to enjoy still,  my dear


© Ravishankar Palanivelu, Aug 31, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments 

Saturday, June 16, 2018

ஊக்கம்

விடா முயற்சியில்
கைவிடாத ஊன்றுகோல்,
மீண்டும் முயற்சிக்க
தூண்டும் வேண்டுகோள் 

அயரும் வேளையில்
உயரும் நோக்கத்தை
உரக்கச் சொல்லி
விழிக்க வைக்கும்
வழிகாட்டி அலாரம் 
ஊக்கம்

அடை மழையில்
குடைப் போல்,
கலங்கிய கடலில்
களங்கரைவிளக்கம் போல்,
நலிந்த வேளையில்
நம்பிக்கை தருவது
ஊக்கம்

கரை
வரை மட்டுமே
வந்து மடிந்த
அலையை
எல்லை மீறி
எகிற வைக்கும்
பின்னணி புயல்
ஊக்கம்

அளவிளா ஆனந்தத்தை
துளி கூட
சொல்ல முடியாமல்
அல்லோலப்பட்டு
வார்த்தைகள்
வற்றிப் போனாலும்,
அவற்றை
உடலைக் கொண்டு
உரைக்க வைக்கும்
சிலிர்ப்பு போன்றது
ஊக்கம் 

அமாவாசை
இருட்டில் நிலவொளி 
இருக்காது என்றாலும்
நட்சத்திர சிமிட்டல்களை
நாசுக்காய் சுட்டிகாட்டி
நம்பிக்கை தருவது
ஊக்கம்

போட்டியின் முடிவில்
கை தட்டுவது
பாராட்டு,
போட்டியின் போது
கை தட்டுவது
ஊக்கம்

தோல்விக்குப் பின்
சாய்ந்துக் கொள்வதற்கு
தோள் கொடுப்பது
ஆறுதல்,
வெல்வது இன்னும்
சாத்தியம் என்று
சொல்லி கொடுப்பது 
ஊக்கம் 

சக்கைப்
போடு போடுகிறாய்
என்று
எத்தளிப்பது அல்ல
ஊக்கம்,
சக்கையாகி போயினும்
மீதம் உள்ளதை
பதமாய் பிழிவது
ஊக்கம்

நடந்து விடுமென்ற
நப்பாசையில் வாழ்த்து
நல்குவது
அவர்கள் மேலுள்ள
அன்பை காட்டுகிறது,
முடியாததை, கடுமையானதை
முனைந்து முடிக்க
முயற்சிக்க ஊக்குவிப்பது 
அவர்கள்
திறமையின் மேலுள்ள 
நம்பிக்கையை காட்டுகிறது

ஊக்கத்தின்
தாக்கம்
சாமான்யன்
சாம்ராஜ்ஜியம் எய்ததிலும்,
அறியாதவர்
அரிதாய் சாதனை 
பெரியதாய் புரிந்ததிலும்
நிறைந்துள்ளது;
ஆயினும் இவை 
புவியை வென்ற 
புல்லிலும்,
வெறுங்காற்றில்
வலை பிண்ணும்
கலை அறிந்த
சிலந்தியிடமும்,
மொத்த ஜீவராசிகளின்
சுயஊக்கத்தின் முன்
சுமார் தான்.

© Ravishankar Palanivelu, June 16, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.